டில்லி

தேசிய மக்கள் தொகை பதிவேடு விவரங்களை ஆன்லைன் மூலம் பதிய சொல்ல மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

மத்திய அரசு அறிவித்த குடியுரிமை பட்டியல் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.  இதன் மூலம் பலர் தங்கள் குடியுரிமையை இழக்க நேரிடும் எனவும் சொந்த நாட்டிலேயே அகதிகள் ஆகும் நிலை உண்டாகும் எனவும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.  ஆனால் வளரும் நாடான இந்தியாவுக்கு இவை அவசியமானது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த அடிப்படையில் முதலில் தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணி தொடங்கியது கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 முதல் செப்டம்பர் 20 வரை நடந்த இந்த கணக்கெடுப்பில் சுமார் 30 லட்சம் பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டது.   இதன் பிறகு முதல் கட்டத்தின் நீட்டிப்பாக வீடுகள் மற்றும் வாடகை குடியிருப்புக்கள் விவரம் 2020 ஆம் வருடம் ஏப்ரல் 1 தொடங்க இருந்தது.

ஆனால் கொரொனா பரவல் காரணமாக இது ஒத்தி வைக்கப்பட்டது;   சுமார் ஒரு வருடத்துக்குப் பிறகு மார்ச் 5 முதல் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.  மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக இந்த வருட நிதி நிலை அறிக்கையில்  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரூ.3,768 கோடி ஒதுக்கீடு செய்தார்.  தேசிய மக்கள் தொகை பதிவேட்டு பணிகளுக்குத் தனியாக தற்போது நிதி ஒதுக்கவில்லை என்றாலும் கடந்த வருடம் ஒதுக்கப்பட்ட ரூ.3941.35 கோடி அப்படியே உள்ளது.

இந்த தேசிய மக்கள் பதிவேடு தயாரிப்பில் மக்களிடம் கேட்க உள்ள கேள்விகள் ஏதும் வெளியிடப்படவில்லை.   ஆயினும் குடிமக்களின் தந்தை மற்றும் பிறந்த தேதி, இடம்,  தற்போது வசிக்கும் இடம், தாய் மொழி ஆதார், வாக்காளர் அட்டை மொபைல் விவரங்கள், ஓட்டுநர் உரிம எண் ஆகியவை கேட்கப்படலாம் எனக் கூறப்பட்டது.

வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு எடுப்பதற்கு முன்பே மக்கள் தங்களைப் பற்றிய விவரங்களை ஆன்லைன் மூலம் பதியச் சொல்லலாம் என தற்போது மத்திய அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.  இந்த ஆன்லைன் பதிவுக்கு பிறகு அவர்களுக்கு ஒரு பதிவு எண் வழங்கப்படும் எனவும் அதை மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது அளிக்கலாம் எனவும் தெரிய வந்துள்ளது.

இதற்காக மொபைல் செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இதில் கைரேகை பதிவு அல்லது ஆவணங்கள் எதுவும் கேட்கப்பட மாட்டாது எனவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  இவ்வாறு பதியப்படும் விவரங்கள் எதிர்கால பயன்பாட்டுக்காக கணினியில் பதிந்து வைக்கப்படும் எனவும் அந்த அதிகாரி கூறி உள்ளார்.

[youtube-feed feed=1]