சென்னை: விடுமுறை தினமான நேற்று (ஞாயிறு) சென்னை கேகேநகர் மற்றும் தி.நகர் பகுதியில், 1 மணி நேரத்தில் 6 இடங்களில் அடுத்தடுத்து செல்போன் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இது பொதுமக்களிடையே பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கே.கே.நகர் ஆற்காடு சாலையில் உள்ள தனியார் உணவு டெலிவரி செய்யும் கிடங்கில் பணியாற்றி வரும், அசோக் நகரைச் சேர்ந்தவர், பிரசாந்த் ராஜ் (21) என்பவர்,. நேற்று இரவு 9.40 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டு, வேலைக்கு நடந்து சென்றார். அவர் கேகே நகர் ராஜமன்னார் சாலை சிவன் பார்க் அருகே பிரசாந்த் சென்று கொண்டிருந்தபோது, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர், பிரசாந்த் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துவிட்டுக் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, முகப்பேரில் வசித்து வரும் ராமலிங்க சாஸ்திரி (59) என்பவர், நேற்று கேகே நகரில், தான் புதிதாகக் கட்ட உள்ள வீட்டுக்கு வாஸ்து பார்த்துவிட்டு சாலிகிராமம் 80 அடி சாலையில் நேற்றிரவு 9.50 மணியளவில் நடந்து சென்று கொண்டே போனில் பேசிக்கொண்டு சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் செல்போனை பறித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, தொடர்ந்து மாம்பலம் தண்டபாணி தெரு வழியாக நடந்து சென்ற ஒருவர் மற்றும் தனசேகர் தெருவில் நடந்து வந்த ரேகா என்ற பெண் உள்பட 6 இடங்களில் நேற்று இரவு செல்போன் பறிப்பு நிகழ்ந்துள்ளது.
செல்போனை பறி கொடுத்த நபர்கள் கேகே நகர், அசோக் நகர் மற்றும் தியாகராய நகர் போன்ற காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து 6 இடங்களில் செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விசாரணையில், 6 இடங்களில் செல்போன் பறிப்பு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே நபர்கள் எனத் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இதுதொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.