இஸ்லாமாபாத்,
இந்திய உளவாளி என சந்தேகிக்கப்பட்டவருக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவை சேர்ந்த குல்பூஷன் ஜாதவ் என்பவர்மீது பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது,.
இந்த செய்தியை இராணுவ பொதுத் தொடர்புகளில் துறை தலைவர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் நேற்று பிற்பகல் அறிவித்தார்.
ஜாதவ் மீதான வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டுள்ளதாகவும், ஜாதவ் இந்தியாவை சேர்ந்த கடற்படை அதிகாரி என்றும், ஈரான் வழியாக தொழிலதிபர் போர்வையில் பாகிஸ்தான் வந்து உளவு செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதன்பேரில் பாகிஸ்தானில் உள்ள ராணுவ நீதிமன்றம் ஒன்று அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
பாகிஸ்தானின் பதற்றமான பகுதியான பலூசிஸ்தானில், உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் குல்பூஷன் ஜாதவ் கடந்த ஆண்டு மார்ச் 3, 2016ம் ஆண்டு பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார்.
அவர் ஓய்வுபெற்ற இந்திய கடற்படை வீரர் என்பதை ஒப்புக்கொண்டுள்ள இந்தியா அரசு, அவர் உளவு பார்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது. அவர் பலூசிஸ்தானில் கைது செய்யப்படவில்லை என்றும், இரானில் இருந்து கடத்தப்பட்டார் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை, கேலிக்கூத்தானது என்று இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
அந்த தண்டனை நிறைவேற்றப்பட்டால், அதை திட்டமிடப்பட்ட படுகொலையாகவே இந்தியா கருதும் என்று வெளியுறவு அமைச்சக அறிக்கை கூறுகிறது.