லக்னோ:

நாடு முழுவதும் உள்ள அனைத்து ரெயில்களிலும் வைபை வசதி மற்றும் ரெயில் பெட்டிகளில் சிசிடிவி கண்காணிப்பு  காமிரா பொருத்தப்படும் என மத்திய ரெயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

“நாட்டில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களையும் தூய்மை படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அது போல, ரெயில் நிலையங்களை  பாதுகாப்பானதாக மாற்றவும், பயணிகளுக்கு தேவையான  அனைத்து வசதிகள் உள்ளதாகவும் மாற்ற மத்திய அரசு திட்டமிட்டு செயலாற்றி வருகிறது என்று கூறினார்.

ரெயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக  அனைத்து ரயில் பெட்டிகளிலும்வ வைபை வசதியுடன் சிசிடிவி கண்காணிப்பு  கேமிரா பொருத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் உலகிலேயே மிகப்பெரிய தொழிற்சாலையாக ரேபரேலி ரெயில் பெட்டித் தொழிற்சாலையை அமைக்க ரெயில்வே துறை திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தார்.

தற்போது,  இந்திய ரெயில்வே கட்டுப்பாட்டின் கீழ் 8500 க்கும் மேற்பட்ட ரெயில்வே நிலையங்கள் உள்ளன. இந்த ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு போதுமான வசதிகளை வழங்குவதற்கு ரெயில்வே பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், போக்குவரத்து எதிர்பார்ப்பு அளவை அடிப்படையாகக் கொண்ட புதிய நிலை யங்களை நிர்மாணிப்பதில் சில வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றும் கூறினார்.

மேலும், ரெயில் நிலையங்களில்   பயணிகளின் பாரத்தினை எளிதாக்குவதற்கு, நிலையங்களில் லிஃப்ட் மற்றும் எக்ஸ்கலேட்டர்கள். குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் குறைபாடுகள் உள்ள நபர்கள் ஆகியோருக்கு பேட்டரியால் இயக்கப்படும் வாகனங்கள்,  சக்கர நாற்காலி உதவி தேவைப்படும் பயணிகளுக்கு யத்ரி மித்ரா சேவா,  நன்கு வசதியான  ஒய்வு அறைகள், காத்திருக்கும் அறை போன்றவை செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ரெயில்வே தொடர்பாக பாராளுமன்றத்தில் உறுப்பினர் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், பயணிகளின் டிக்கெட் புக்கிங் வேலைபாடுகளை குறைக்க பல சிறப்பு திட்டங்கள் செயல்படுத்த இருப்பதாகவும், இதன்படி எஸ்பிஐ  வங்கியுடன் இணைந்து பணமில்லா (CashLess)  டிக்கெட் முறையினை அறிமுகப்படுத்த உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.