டில்லி
முக்கிய ரெயில்களான சதாப்தி, ராஜதானி, மற்றும் டுரண்டோ ரெயில்களில் ஒவ்வொரு பெட்டியிலும் நான்கு கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்படும் என இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது.
ஓடும் ரெயிலில் விரும்பத் தகாத சம்பவங்கள் நிகழ்வது அதிகரித்து வருகிறது. அதை ஒட்டி அனைத்து ரெயில் பெட்டிகளிலும் கண்காணிப்பு காமிரா வைக்க வேண்டும் என்னும் கோரிக்கையை பலரும் விடுத்துள்ளனர். அது குறித்து இன்று வட இந்திய ரெயில்வேயின் பொது மேலாளர் விஷ்வேஷ் சௌபே பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார்.
அந்த சந்திப்பில், “அனைத்து சதாப்தி, ராஜதானி மற்றும் டுரண்டோ ரெயில்களில் எல்லா பெட்டிகளிலும் கண்காணிப்பு காமிரா பொருத்தப் பட உள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் நுழைவாயிலில் ஒவ்வொன்றும் இடையில் இரண்டுமாக மொத்தம் 4 காமிராக்கள் பொறுத்தப்பட உள்ளது. இந்த காமிராக்கள் சமூக நலத்திட்டத்துக்காக அமைக்கப்பட்டுள்ள நிர்பயா நிதியில் இருந்து வாங்கப்பட உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 11000 ரெயில்களில் கண்காணிப்பு காமிரா பொருத்த ரூ.3000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதைக் கொண்டு முக்கிய ரெயில்களிலும் புறநகர் ரெயில்களிலும் கண்காணிப்பு காமிரா பொருத்த உள்ளதாகவும் ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.