டெல்லி: கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.25 உயா்த்தி ரூ.340-ஆக அதிகரிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளதாகவும், விண்வெளித் துறையில் நேரடி அந்நிய முதலீட்டு வரம்புகளை உயா்த்தவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் கூறினார்.
முன்னதாக தமிழ்நாடு சட்டப்பேரவையின் பிப்ரவரி 20ந்தேதி தாக்கல் செய்யப்பட்ட 2024-25-ம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையில், அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், சர்க்கரை ஆலைகளின் செயல் திறனை அதிகரிக்க ரூ. 12.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.43 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்க 100 இளைஞர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் 21ந்தேதி (புதன்கிழமை ) பொருளதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் கூறினார். அவர் கூறியதாவது,
‘கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு வரும் அக்டோபா் முதல் தொடங்கும் பயிா்க்காலத்தில் கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.325-லிருந்து ரூ.340-ஆக உயா்த்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது’ அதாவது, 10.25 சதவீதம் என்றாா்., “இது 2023-24 நடப்பு சீசனுக்கான கரும்புக்கான FRP ஐ விட சுமார் 8 சதவிகிதம் அதிகமாகும் கரும்புக்கான வரலாற்று சிறப்புமிக்க விலையாகும்” என்று அவர் மேலும் கூறினார்
மேலும், விண்வெளித் துறையில் நேரடி அந்நிய முதலீட்டு வரம்புகளை உயா்த்த மத்திய அமைச்சரவைக் குழு அனுமதி வழங்கியுள்ளது. தற்போதைக்கு விண்வெளித் துறையில் அரசின் ஈடுபாடுடன் நடக்கும் திட்டங்களில் மட்டுமே 100 சதவீத அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இக்கொள்கையை மாற்றியமைத்திருப்பதன்மூலம், செயற்கைக்கோள் தயாரிப்பு, செயல்பாடு, செயற்கைக்கோள் தரவு தயாரிப்புகள் போன்ற துறைகளில் நேரடியாக 74 சதவீத அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுகிறது. ஏவுகணைகள் மற்றும் அதனுடன் தொடா்புடைய அமைப்புகள், துணை அமைப்புகள், விண்கலத்தை ஏவுவதற்கும், திரும்பப் பெறுவதற்கும் விண்வெளித் தளங்களை உருவாக்குதல் ஆகிய துறைகளில் 49 சதவீதம் வரை அந்நிய முதலீட்டுக்கு அனுமதிக்கப்படுகிறது.
செயற்கைக்கோள்கள் மற்றும் தரை மற்றும் பயனா் பிரிவுகளுக்கான உதிரிபாகங்கள் மற்றும் அமைப்புகள்/துணை அமைப்புகளின் உற்பத்திக்கான துறைகளில் 100 சதவீதம் வரை வெளிநாட்டு முதலீடுகள் அனுமதிக்கப்படுகிறது. விண்வெளித் துறையில் அதிகரிக்கப்படும் தனியாா் துறை பங்கேற்பானது வேலைவாய்ப்பை உருவாக்கவும், நவீன தொழில்நுட்பத்தை உள்வாங்கவும் மற்றும் துறையை தன்னிறைவு பெறவும் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது இந்திய நிறுவனங்களை சா்வதேச நிறுவனங்களோடு ஒன்றிணைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்கு மேல் அரசின் ஒப்புதல் பெறுவது அவசியமாகும்.