டில்லி:

நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நீட் தேர்வு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை  வரும் 12ந்தேதி வரை நீட்டித்து சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்து உள்ளது.

மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் எனப்படும் தேசிய தகுதிகாண நுழைவுத் தேர்வு மே 6-ம் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே  சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. அத்துடன் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.

ஆதார் எண் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், ஆதார் தேவையில்லை என்று கடந்த 8ந்தேதிதான் உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்தது.

அதைத்தொடர்ந்து இன்றுடன் முடிவடைய இருந்த விண்ணப்பம் பதிவு செய்வதற்கான  கால அவகாசத்தை மேலும் 3 நாள் நீட்டித்து வரும் 12ந்தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம் என சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறித்து உள்ளது.

அதன் படி மார்ச் 12-ம் தேதி வரை மாலை 5.30 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். மேலும் ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கு 13-ம் தேதி இரவு 11.50 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

ஆதாருக்கு பதிலாக மாணவ, மாணவிகள்  ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், வங்கி கணக்கு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றையும் பயன்படுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இதில் எதை மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கிறபோது பயன்படுத்துகிறார்களோ, அந்த அடையாள ஆவணத்தை தேர்வு எழுதும் வரும் மாணவ, மாணவிகள் காட்ட வேண்டும் என மத்திய கல்வி வாரியம் சிபிஎஸ்இ  தெரிவித்து உள்ளது.

2018-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 6-ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.