புதுடெல்லி:
சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய தேதி விவரங்கள் ஏப்ரல் 14 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று மத்திய மனிவளத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன. சிபிஎஸ்சி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளும், 12 ஆம் வகுப்பில் ஒரு சில தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக இந்த தேர்வுகள் எப்போது நடைபெறும் என்று பெற்றோர்கள், மாணவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால், சிபிஎஸ்இ தேர்வுகள் குறித்து ஏப்ரல் 14 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘கொரோனா வைரஸ் காரணமாக கல்வித்துறையும் முடங்கியுள்ளது. இந்த சூழலில் பள்ளி, கல்லூரிகள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
அதே போல், தள்ளி வைக்கப்பட்ட தேர்வுகள எப்போது நடத்துவது, நடந்து முடிந்த தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் எப்போது தொடங்குவது என்பது தொடர்பான அனைத்து திட்டங்களும் தயாராக உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு நிலைமையை கருத்தில் கொண்டு, ஏப்ரல் 14 ஆம் தேதி முடிவு செய்யப்படும்’ இவ்வாறு மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக எல்லா தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. திங்களன்று நிலவரப்படி, கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,067 எட்டியுள்ளது. சுமார் 109 பேர் உயிரிழந்துள்ளனர்.