குர்கான்:

‘‘ரியான் பள்ளி மாணவன் கொலை வழக்கு விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும்’’ என ஹரியானா முதல்-வர் மனோகர் லால் கட்டார் கூறியுள்ளார்.

ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள ரியான் சர்வதேச பள்ளியில் 2-ம் வகுப்பு படித்த 7 வயது மாணவன் பிரத்யுமன் தாகூர் கடந்த 8ம் தேதி கழிப்பிடத்தில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டான். பாலியல் கொடுமையால் அந்த சிறுவனை பள்ளியின் பேருந்து நடத்துனர் அசோக் கொன்றது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இதில் பெரிய சதிதிட்டம் உள்ளது என்றும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. முதல்வர் மனோகர் லால் கட்டார் பிரத்யுமன் தாகூரின் இல்லத்திற்கு சென்று சிறுவனின் தாயாருக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ சிறுவன் கொலையான பள்ளி நிர்வாகத்தை அரசு 3 மாதங்களுக்கு எடுத்து நடத்தும். இந்த வழக்கு சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார். இது வரவேற்கதக்கது என சிறுவனின் தந்தை கண்ணீர் மல்க தெரிவித்தார்.