நீட்-யுஜி தாள் கசிவு வழக்கில் குஜராத்தில் 7 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனந்த், கெடா, அகமதாபாத் மற்றும் கோத்ரா ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.
அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் MBBS, BDS, AYUSH மற்றும் மருத்துவம் தொடர்புடைய பிற படிப்புகளுக்கான சேர்க்கைக்காக NTA ஆல் NEET-UG தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே 5ஆம் தேதி வெளிநாடுகளில் 14 இடங்கள் உட்பட 571 நகரங்களில் 4,750 மையங்களில் நடத்தப்பட்டது. இதில் 23 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்வெழுதினர்.
இந்த தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக பீகார், குஜராத், ராஜஸ்தான் உட்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் புகார் எழுந்தது.
இதனையடுத்து நீட் தேர்வு கேள்வித் தாள் கசிவு தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டதை அடுத்து ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் உள்ள ஒரு பள்ளியின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் மற்றும் ஒரு ஹிந்தி நாளிதழின் பத்திரிகையாளர் ஆகியோரை சிபிஐ நேற்று கைது செய்தனர்.
மே 5 ஆம் தேதி தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு ஒயாசிஸ் பள்ளியின் முதல்வர் எஹ்சானுல் ஹக் ஹசாரிபாக் நகர ஒருங்கிணைப்பாளராகவும் துணை முதல்வர் இம்தியாஸ் ஆலம் NTA இன் பார்வையாளராகவும், ஒயாசிஸ் பள்ளியின் மைய ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் நீட் கேள்வித் தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடைய பத்திரிகையாளர் ஜமாலுதீன் அன்சாரி உள்ளிட்ட மேலும் ஐந்து பேரை இன்று கைது செய்த சிபிஐ அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீட் கேள்வித் தாள் கசிவு தொடர்பாக பீகார் மற்றும் குஜராத்தில் தலா ஒரு வழக்கு, ராஜஸ்தானில் 3 வழக்குகள் என மொத்தம் ஆறு எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ள சிபிஐ குஜராத் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இன்று மேற்கொண்டு வரும் தீவிர சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.