டில்லி:

2ஜி வழக்கு தொடர்பான விசாரணையை  விரைந்து விசாரிக்க கோரி டில்லி உயர்நீதி மன்றத்தில் சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியின்போது, திமுகவை சேர்ந்த ஆ.ராஜா தொலை தொடர்பு அமைச்சராக பதவி வகித்தபோது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்தததில்,  ரூ.1.76 லட்சம் கோடிக்கு முறைகேடு நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த முறை கேட்டில் அமைச்சர் ராஜாவுடன், திமுக எம்.பி. கனிமொழி உள்பட பலர் சம்பந்தப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால், வழக்கு விசாரணையை தொடர்ந்து டில்லி சிபிஐ நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் ராஜா, கனிமொழி உள்பட14 பேரையும் விடுதலை செய்து கடந்த  2017ம் ஆண்டு  டிசம்பர் 21ந்தேதி அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது.

ஆனால், சிறப்பு நீதிமன்றம்  தீர்ப்பை எதிர்த்து சிபிஐ தரப்பில் டில்லி உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 30ந்தேதி விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  2ஜி வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கோரி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் டில்லி உயர்நீதி மன்றத்தில் புதிய  மனு தாக்கல் செய்துள்ளது.   நாட்டின் நலன் சார்ந்த வழக்கு என்பதால் காலம் தாழ்த்தாமல் உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.