புனேவைச் சேர்ந்த ரிஜிஸ்ட்ரார் ஆஃப் கம்பெனியின் மூத்த அதிகாரி, ரூ. 3 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதற்காக சிபிஐயின் விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளார்.

நிறுவனங்களின் உதவிப் பதிவாளரும், புனே ஆர்ஓசி அலுவலக இன்ஸ்பெக்டருமான அஜய் பவார் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று (அக். 16) எஃப்ஐஆர் பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள் அவரின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிர்லா கோல்டு அண்ட் பிரீசியஸ் மெட்டல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் லஞ்சத்தின் ஒரு பகுதியாக ரூ.3 லட்சத்தை பவாருக்கு அக்டோபர் 7ஆம் தேதி கொடுத்ததாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிறுவனத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கக் கோரி அதன் இயக்குனர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் அஜய் பவார் உத்தரவிட்டார்.

2024 ஆகஸ்ட் 27ம் தேதி மீண்டும் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், நிறுவனத்தின் தணிக்கையாளர்கள், இயக்குனர்கள் மற்றும் முன்னாள் இயக்குனர்கள் அனைவரையும் செப்டம்பர் 5ம் தேதிக்குள் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்து அஜய் பவார் முன் விசாரணைக்கு ஆஜரான நிறுவனத்தின் இயக்குனர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராக வலியுறுத்தப்பட்டது.

ஒரு கட்டத்தில் நிறுவனத்தின் ஆடிட்டர் மற்றும் அந்நிறுவன செயலாளருடன் நெருக்கமாக பேசத் தொடங்கிய பவார், நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட லஞ்சம் கேட்டதாக எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிர்லா கோல்டு அண்ட் பிரீசியஸ் மெட்டல்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு சாதகமாக வழக்கை முடித்துவைக்க ரூ. 30 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் பின்னர் அந்நிறுவனம் ரூ. 5 லட்சம் தர முன்வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அக்டோபர் 7ம் தேதி முதல்கட்டமாக ரூ. 3 லட்சம் லஞ்சம் பெற்றுக்கொண்ட அஜய் பவார் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து அந்நிறுவன இந்நாளில் மற்றும் முன்னாள் இயக்குனர்களுக்கு விலக்களித்தார்.

இதையடுத்து அக்டோபர் 15 மற்றும் 16ம் தேதிகளில் நிறுவன அதிகாரிகளுடன் மீண்டும் தொடர்பு கொண்ட அஜய் பவார் தனக்கு மொத்தத்தில் ரூ. 6 லட்சம் தரவேண்டும் என்றும் மீதித் தொகையாக ரூ. 3 லட்சம் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

வழக்கை முடித்து வைக்காமல் பணம் பறிப்பதில் மட்டுமே குறியாக இருந்த அந்த அதிகாரியின் செயலால் அதிர்ச்சி அடைந்த அந்நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் சந்தீப் ஜோஷி இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

புகாரை ஏற்றுக்கொண்ட சிபிஐ அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ஆர்ஓசி இன்ஸ்பெக்டர் அஜய் பவார் லஞ்சம் வாங்கியதற்கான போதுமான ஆதாரம் இருந்ததை அடுத்து அவர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து வழக்கை மேலும் விசாரித்து வருகின்றனர்.