டில்லி

விடியோகோன் நிறுவன கடன் வழங்குதலில் முறைகேடு காரணமாக ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் இயக்குனர் சந்தா கோச்சார் மற்றும் அவர் கணவர், வீடியோகோன் இயக்குனர் மீது சிபிஐ வழக்கு பதிந்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் இயக்குனராக பணி புரிந்தவர் சந்தா கோச்சார்.  இவர் கணவர் தீபக் கோச்சார் ஒரு தொழிலதிபர் ஆவார்.   வீடியோகோன் நிறுவனத்துக்கு ஐசிஐசிஐ வங்கி கடந்த 2012 ஆம் ஆண்டு ரூ.3250 கோடி கடன் வழங்கியது.   அந்தக் கடனை வீடியோகோன் நிறுவனம் வங்கிக்கு திருப்பிச் செலுத்தாததை ஒட்டி விசாரணை நடந்தது.

அந்த விசாரணையில் வீடியோகோன் நிறுவனத்தின் துணை நிறுவனமான நூ பவர் ரின்யுவபில் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் பெரும்பான்மையான  பங்குகளை தீபக் கோச்சாருக்கு வீடியோகோன் நிறுவனம் வழங்கி உள்ளது தெரிய வந்தது.   அதன் பிறகே ஐசிஐசிஐ வங்கி வீடியோகோன் நிறுவனத்துக்கு கடன் வழங்கி உள்ளது.

எனவே கடனை பெறுவதற்காக வீடியோகோன் தனது நிறுவன பங்குகளை வங்கி இயக்குனர் குடும்பத்துக்கு லஞ்சமாக வழங்கியதாக புகார் எழுந்தது.   இதை ஒட்டி வீடியோகோன் நிறுவனத்தின் மும்பை மற்றும் அவுரங்காபாத் அலுவலகம், நூபவர் நிறுவன அலுவலகம், உள்ளிட்ட பல இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.

இந்த சோதனையின் போது ஏராளமான ஆவணங்கள் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.  இதை ஒட்டி ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் இயக்குனர் சந்தா கோச்சார்,  அவர் கணவர் தீபக் கோச்சார்,  வீடியோகோன் நிறுவன இயக்குனர் வேணுகோபால் தூத் மற்றும் சிலர் மீது சிபிஐ வழக்கு  பதிந்துள்ளது.