லக்னோ
உன்னாவ் தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் ஒரு மைனர் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தது நிரூபணம் ஆகி உள்ளதாக சிபிஐ அறிவித்துள்ளது.
உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் என்பவர் மைனர் பெண் ஒருவரை கூட்டு பலாத்காரம் செய்ததாக புகார் ஒன்று காவல்துறையிடம் தரப்பட்டது. அந்த புகாரின் மேல் நடவடிக்கை எதுவும் காவல்துறை எடுக்கவில்லை. இது குறித்து விசாரணை நடத்தக் கோரி அந்தப் பெண் உத்திரப் பிரதேச முதல்வர் இல்லத்தின் முன்பு தீக்குளிக்க முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார்.
மேலும் அந்தப் பெண்ணின் தந்தை குல்தீப் சிங்கின் சகோதரரால் தாக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளார். அதன் பிறகு காவல்துறை விசாரணையை தொடங்கியது. பிறகு சிபிஐக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. குல்தீப் சிங் மற்றும் அவர் சகோதரர் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண் நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் அளித்தார்.
அதை ஒட்டி சிபிஐ அதிகாரி ஒருவர் “விசாரணையில் குல்தீப் சிங் உள்ளிட்டோர் அந்த 17 வயது மைனர் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தது நிரூபணம் ஆகி உள்ளது. மேலும் அந்தப் பெண்ணின் தந்தை காவல்துறை கண்காணிப்பில் இருந்த போது குல்தீப் சிங்கின் சகோதரர் மற்றும் அவர் கூட்டாளிகளால் தாக்கப்பட்டுள்ளார். அதனால் அவர் மருத்துவமனையில் மரணம் அடைந்துள்ளார். இதுவும் தற்போது நிரூபிக்கப் பட்டுள்ளது. எனவே இவ்வழக்கில் விரைவில் குற்றப் பத்திரிகை அளிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.