தருமபுரி: தமிழ்நாடு கனிம வளத்துறை இணை இயக்குனராக பணியாற்றி வந்த சுரேஷ் என்பவரின் தருமபுரி வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒப்பந்த முறைகேடு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் 20ந்தேதி அன்று, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் ரூ. 11.32 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவரது வீடு உட்பட சென்னை, சேலம், தர்மபுரி உள்ளிட்ட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, சேலம் இரும்பாலை அருகே ராசி நகர் பகுதியில் வசித்து வரும் கரூர் கனிமவளத் துறை உதவி இயக்குனர் ஜெயபால் என்பவர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது. . லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி கிருஷ்ணராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டனர். ஓய்வு பெற்ற அதிகாரி, ஜெயபால், தர்மபுரியில் பணியாற்றிய போது, முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு பல்வேறு வகையில் உதவி செய்துள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது தருமபுரியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற கனிம வளத்துறை முன்னாள் இணை இயக்குனர் சுரேஷ்குமார் என்பவர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இவர், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு சுரேஷ் நெருக்கமானவர் என கூறப்படுகிறது இன்று காலை அவரது வீட்டுக்கு வந்த அதிகாரிகள், சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவர் சில ஆண்டுக்கு முன் சேலத்தில் பணியாற்றிய போது ஏரியில் கிராவல் மண் அள்ள, சட்டவிரோதமாக அனுமதி அளித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து ஒப்பந்த முறைகேடு தொடர்பாக சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்து சிபிசிஐடி போலீசார் காலை முதல் அவரது வீட்டில் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்காலிகமாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் கடந்த கால ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது.
நேற்று , முன்னாள் அதிமுக அமைச்சர்கள், விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் சோதனை நடத்தப்பட்ட நிலையில், இன்று கனிம வளத்துறை முன்னாள் அதிகாரி வீட்டில் சோதனை நடத்தப்பட்டு இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.