டில்லி:
கர்நாடகா மற்றும் தமிழகத்தில் அமைதியை நிலைநாட்ட உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது. இந்த நிலையில், விசாரணை பெஞ்சில் இடம் பெற்றிருந்த நீதிபதி நாகப்பன் வழக்கு விசாரணையில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டார்.
தமிழகத்துக்கு காவிரி நீர் விடக்கோரி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை எதிர்த்து கடந்த திங்கள்கிழமை கன்னட அமைப்பினர் பெங்களூருவில் போராட்டம் நடத்தினர். இது பெரும் வன்முறையாக வெடித்தது. தாமதமாக விழித்துக் கொண்ட காவல்துறை 16 காவல் சரகங்களில் ஊரடங்கு உத்தரவையும், மொத்த பெங்களூருக்கும் 144 தடையுத்தரவையும் பிறப்பித்து உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தே கலவரம் வெடித்திருக்கிறது என்பதால், உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று கன்னியாகுமரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிவகுமார் உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடக்க இருக்கிறது.
இந்த நிலையில் பெஞ்ச் நீதிபதிகளில் ஒருவரான நாகப்பன், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டார்.
நாகப்பன் தமிழகத்தைச் சேர்ந்தவர். ஆகவே தான் இவ்வழக்கை விசாரிப்பது முறையாக இருக்காது என கருதி அவர் விலகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.