டில்லி:

காவிரி வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 15 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்று உச்சநீதி மன்றம்  தெரிவித்து உள்ளது.

காவிரி நீரில் எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது என்று கூறிய உச்சநீதி மன்றம், தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீரின் அளவை குறைத்தும் உத்தரவிட்டுள்ளது. மேலும்,  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் மத்திய அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் நிலத்தடி நீர் 10 டிஎம்சி அளவுக்கு இருப்பதால், காவிரி நீர் பங்கிட்டில் நீரின் அளவை குறைப்பதாக அறிவித்துள்ள உச்சநீதி மன்றம், தமிழகத்திற்கு குறைந்துள்ள நீர்ன் அளவை கர்நாடகாவுக்கு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

பெங்களூருவின் குடிநீர் தேவையை கருததில் கொண்டு,  அதற்காக  17.75 டிஎம்சி தண்ணீர் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் நதிநீர் பங்கீட்டில் மாற்றம் இல்லை என்றும்  தெரிவித்துள்ளது. கேரளா மற்றும் புதுச்சேரிக்கு போதுமான நீர் வழங்கவும்  நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த தீர்ப்பு இந்த ஆண்டு முதல் 15 ஆண்டுகள் செல்லுபடியாகும் என்றும், காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே காவிரி நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பின்படி 205 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு கர்நாடகா வழங்க வேண்டும் என்று கூறியிருந்த நிலையில், காவிரி நடுவர் மன்றம்  2007ம் ஆண்டு நீரின் அளவை குறைத்து 192 டிஎம்சி வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந் நிலையில்,  தமிழகம் 264 டி.எம்.சி. தண்ணீர்  கேட்ட நிலையில், உச்சநீதிமன்றம் 177.25 டி.எம்.சி.  என்று குறைத்துள்ளது.

இதன் காரணமாக ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த நீரின் அளவில் இருந்து 14.75 டிஎம்சி அளவு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.