டில்லி:
காவிரி வழக்கு இன்று மீண்டும் உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின்போது, மத்திய அரசு காவிரி நதிநீர்ப் பங்கீட்டிற்கான வரைவு திட்டத்தை தாக்கல் செய்யும் என எதிர்பார்த்த நிலையில், அதை தாக்கல் செய்யாமல் மேலும் கால அவகாசம் கோரி தமிழகத்தை ஏமாற்றி உள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையின்போது, காவிரி பிரச்சினையில் ஸ்கீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேட்டு மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்கு, காவிரி நதிநீர்ப் பங்கீட்டிற்கான வரைவுத் திட்டத்தை தயாரித்து தாக்கல் செய்ய உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு வழக்கை மே 3ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.
அதன்படி இன்று காலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், வரைவு திட்டத்திற்கு பிரதமர், துறை சார்ந்த அதிகாரிகள் ஒப்புதல் பெறவில்லை என்றும், கர்நாடக தேர்தல் காரணமாக பிரதமர் கர்நாடகாவில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால், வரைவு திட்டத்தை இறுதி செய்ய மேலும் கால அவகாசம் கோரினார்.
கர்நாடக தேர்தல் முடிந்து பிரதமர் வந்த பிறகுதான் வரைவு திட்டத்திற்கு ஒப்புதல் பெற முடியும் என்றும், அதற்கான பணிகள் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் கூறி இன்றும் உச்சநீதி மன்ற உத்தரவு படி வரைவு திட்டத்தை தாக்கல் செய்யாமல் தமிழகத்தை வஞ்சித்தது.
ஏற்கனவே காவிரி பிரச்சினையில் உச்சநீதி மன்ற தீர்ப்பு படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கடைசியில் ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு தமிழகத்தை வஞ்சித்த மத்திய அரசு, தற்போதும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காமல் மீண்டும் வஞ்சித்து உள்ளது.