பெங்களூரு: 
காவிரி பிரச்சினையில் உச்ச நீதி மன்றம் வரம்பு மீறி செயல்படுவதாக முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவகவுடா கூறி உள்ளார்.
காவிரியில் தண்ணீர் திறந்துவிடாதை அடுத்து, தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, காவிரியில் தண்ணீர் திறந்துவிடும் படியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினை காரணமாக முதல்வர் சித்தராமையா அனைத்து கட்சி தலைவர்களை கூட்டி ஆலோசனை நடத்தினார். அப்போது, முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாகவும் சித்தராமையா அறிவித்ததாக தெரிகிறது.
1devuda1
இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் பிரதமரான தேவகவுடா:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க  உத்தரவிட்டுள்ளதன் மூலம் உச்ச நீதிமன்றம் வரம்பு மீறிச் செயல்பட்டுள்ளது என்று கண்டனம் தெரிவித்தார். மேலும்,
காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு நியாயமானதல்ல. இந்த விவகாரத்துக்காக முதல்வர் சித்தராமையா தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய அவசியமில்லை. மாறாக, தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்த வேண்டும் என்றார்.
இதனால் ஏற்படும் விளைவுகளை அனைத்து கட்சிகளும் கூட்டாக எதிர்கொள்ளும். குடிநீருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும்  உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக நிராகரிக்க வேண்டும்.
காவிரி நீர் விவகாரத்தில் 3 முறை எனது பதவியை ராஜிநாமா செய்துள்ளேன். இப்போதும் எனது மக்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்யத் தயாராக இருக்கிறேன் என்றார்.
முன்னாள் பிரதமரான தேவகவுடாவே உச்சநீதி மன்ற தீர்ப்பை விமர்சித்து, பொறுப்பற்ற முறையில் மிரட்டல் தொனியில் பேசியருப்பது, இந்திய அரசியல் களத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.  இதற்காக அவர்மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்படலாம் என தெரிகிறது.
மேலும், அனைத்துகட்சி கூட்டத்தில் பேசிய கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி:
காவிரி நதியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டால், பெங்களூரு நகர மக்களுக்கு குடிக்க நீர் இருக்காது என்றார். மேலும் தண்ணீர் இருக்கும்போது திறந்துவிடச் சொன்னால், தண்ணீர் தருவதில் எந்த தொந்தரவும் இல்லை. கர்நாடகம் மற்றும் தமிழகம் இடையே நிலவும் இந்தப் பிரச்னையில் தலையிட்டு, தீர்வு காணுமாறு கேட்டுக் கொண்டும், அதில் பிரதமர் மோடி ஆர்வம் காட்டவில்லை என்றார்.
மின் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் : கர்நாடக மாநில நலன் முக்கியம். அதைக் காப்பாற்றுவது குறித்து சிந்தித்து வருகிறோம்.  கிருஷ்ணராஜ சாகர் அணையை நாம் செலவழித்துக் கட்டினோம். அதன் உரிமையை எந்தக் காலத்திலும் விட்டுத் தர மாட்டோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்றார் அவர்.