டில்லி,

காவிரி பிரச்சினை தொடர்பான இறுதி விசாரணையில் உச்சநீதி மன்றம் கேட்டுக்கொண்டதற் கிணங்க தமிழக அரசு சார்பில் 4,000 பக்கங்கள் கொண்ட எழுத்துப்பூர்வமான வாதம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக, நடுவர்மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை கடந்த 11–ந் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித் வராய், ஏ.எம். கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கர்நாடக அரசு தரப்பில் மூத்த வக்கீல்கள் பாலி நாரிமன், எஸ்.எஸ்.ஜாவளி, மோகன் கர்த்தார்க்கி, ஷியாம் திவான் ஆகியோர் வாதாடினர்.

விசாரணையின்போது   காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்தது ஏன் என்று மத்திய அரசுக்கு  கேள்வி எழுப்பி அதற்கு சட்ட ரீதியிலான விளக்கம் தேவை என்றும்  உத்தரவிட்டனர்.

விசாரணையின்போது தமிழக அரசு சார்பில்,   காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின்  எந்த உத்தரவையும் கர்நாடக அரசு பின்பற்றுவது கிடையாது என்றும்,  காவிரி நீரை மட்டுமே நம்பியுள்ள தமிழகத்திற்கு முறையாக தண்ணீர் விநியோகிக்கப்படவில்லை எனில், தமிழகம் அழியும் அபாயம் உள்ளதாக,  தமிழக அரசு முறையிட்டது.

இந்த வழக்கில் தமிழகம், கர்நாடக, புதுச்சேரி  உள்பட அனைத்து மாநிலங்களும் வாதங்கள் நிறைவு பெற்ற நிலையில், எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து  4 ஆயிரம் பக்கங்கள் கொண்ட எழுத்துப்பூர்வ வாதத்தை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று  தாக்கல் செய்துள்ளது.

அதில், தமிழகத்திற்கு கூடுதலாக 72 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்றும்,காவிரி டெல்டாவின் நிலத்தடி நீரை கணக்கில் எடுத்து கொள்ள கூடாது எனவும் வலியுறுத்தி உள்ளது. மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் எனவும்  தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல கர்நாடக தரப்பிலும் எழுத்துப்பூர்வமான வாதம் தாக்கல் செய்யப்பட்டது.