டில்லி:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

அப்போது, மத்திய அரசு சார்பில் வாதாடிய அட்டர்னி ஜெனரல், காவிரி வரைவு திட்டம் இறுதி வடிவத்தில் இருப்பதால் மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

எனவே இதற்காக மேலும் 10 நாட்கள் அவகாசம்  வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும்,  நீதிமன்றத்தின் பரிந்துரைப்படி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளதாகவும் கூறியது.

இதைத்தொடர்ந்து, வழக்கை வரும் 14ந்தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், அன்று  காவிரி வரைவு திட்ட அறிக்கையைதாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும் அன்றைய விசாரணையின்போது மத்திய நீர்வளத்துறை செயலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளது.

ஏற்கனவே கடந்த 3-ம் தேதி விசாரணையின்போது, கர்நாடக தேர்தலை காரணம் காட்டி,  மத்திய அரசு வரைவு அறிக்கையை தாக்கல் செய்யாமல்  இழுத்தடித்து. தற்போதும் மேலும் 10 நாட்கள் அவகாசம் கேட்டு இழுத்தடித்து உள்ளது.

வரும் 12ந்தேதி கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வருவதால், 14ந்தேதிக்கு வழக்கின் அடுத்த விசாரணையை உச்சநீதி மன்றம் ஒத்தி வைத்துள்ளது.