கால்நடைகளுக்கு கட்டுப்பாடு!! மேற்கு வங்க பால் சந்தையில் 50% வர்த்தகம் வீழ்ச்சி

Must read

கொல்கத்தா:

மாட்டு இறைச்சிக்கு கால்நடைகள் விற்பனை செய்வது தொடர்பாக மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டதை தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தில் பால் உற்பத்தி 50 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. அதோடு பால் விலையும் உயர்ந்துள்ளது.

மாடு, எருமைகளை கொண்டு வருவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மாட்டு இறைச்சி பிரச்னை, கண்காணிப்பு குழு, மத்திய அரசின் புதிய அறிவிப்பு, போலீஸ் கெடுபிடி போன்ற காரணங்களால் உ.பி.யில் இருந்து மாடு வரத்து குறைந்துள்ளதால் கொல்கத்தா கணேஷ் டாக்கீஸ் பகுதியில் உள்ள 75 ஆண்டு பழமைவாய்ந்த பால் சந்தை பாதித்துள்ளது.

இது குறித்து ஜோரசங்கோ துக்தோ பையாப்சயி சமீதி தலைவர் ராஜேஷ் சின்கா கூறுகையில், ‘‘இந்த சந்தையில் வர்த்தகர்கள், டீலர்கள், சில்லரை வியாபாரிகள் என 150 பேர் உள்ளனர். தினமும் 1.5 லட்சம் லிட்டர் பால் கையாளப்படும். விழா காலங்களில் 3 லட்சம் லிட்டராக உயரும். ஆனால் தற்போது தினமும் 55 ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே கையாளப்படுகிறது.

உ.பி.யில் சந்தைக்கு கால்நடைகளை கொண்டு வர மக்கள் தயங்குகின்றனர். கால்நடைகளை வாங்கிய பிறகு அதை வெளியில் கொண்டு செல்வதில் சிரமம் உள்ளது. மேலும், கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்வதிலும் அதிக பிரச்னை உள்ளது.

கால்நடைகள் பாலுக்காக வாங்கி செல்லப்படுகிறதா? அல்லது இறைச்சிக்காக வாங்கி செல்லப்படுகிறதா? என்பதை வேறுபடுத்தி காட்ட முடியாத நிலை உள்ளது. வழியில் கண்காணிப்பு குழு மற்றும் போலீசார் கால்நடைகளை பறிமுதல் செய்யும் நிலை உள்ளது. நாட்டின் மிகப்பெரிய பால் சந்தையான இந்த சந்தை உ.பி.யில் உள்ள தில்தர்நகர் கால்நடை சந்தையை நம்பி தான் உள்ளது. இந்த சந்தை கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டுள்ளது’’ என்று அவர் தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘இந்த சந்தை மிகப்பெரிய பால் சந்தையாகும். கடந்த ஒரு ஆண்டு காலமாகவே பாலுக்காக கால்நடை வாங்குவதில் பிரச்னை நிலவுகிறது. கடந்த சில மாதங்களாக இந்த பிரச்னை மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்த சந்தையில் இருந்து சராசரியாக 1.5 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படும். இது தற்போது பாதியாக குறைந்துள்ளது. ஒரு லிட்டர் ரூ. 50 முதல் ரூ. 55 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ. 70 முதல் ரூ. 80 வரை உயர்ந்துள்ளது’’ என்றார்.

‘‘இங்குள்ள வர்த்தகர்கள் பலர் கோ சாலை அமைத்துள்ளனர். இதற்கான மாடு மற்றும் எருமைகளை உ.பி. மாநிலத்தில வாங்கி பீகார், ஜார்கண்ட் வழியாக மேற்கு வங்கத்திற்கு கொண்டு வருவார்கள். கொல்கத்தாவை சுற்றியுள்ள ஹவுரா, வடக்கு மற்றும் தெற்கு பாரகான் பகுதிகளில் கோ சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. 7 அல்லது 8 மாதங்களில் இந்த மாடுகள் பால் கொடுப்பதை நிறுத்திவிடும்.

அதன் பிறகு அவை இடைத்தரகர்கள் மூலம் கிராமத்தினருக்கு விற்பனை செய்யப்படும். இதில் இடைத்தரகர்கள் சில கால்நடைகளை இறைச்சி கடைகளுக்கு விற்பனை செய்வதோடு, பங்களாதேஷூக்கு கடத்தி சென்றுவிடுவார்கள். கால்நடைகள் இறுதியாக இடைத்தரகர்கள் கையில் தான் ஒப்படைக்கப்படுகிறது. அதன் பிறகு அவற்றை பராமரிப்பது கடினமாகிவிடும். பால் உற்பத்தியை பராமரிக்க மாதந்தோறும் கால்நடைகள் புதிதாக வாங்கி வரப்படும்.

உ.பி., பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கெடுபிடிகள் காரணமாக மேற்கு வங்கத்திற்குள் மாடுகள் கொண்டு வருவது பாதித்துள்ளது. பாலுக்கு கூட கால்நடைகளை கொண்டு வர முடியவில்லை. கடந்த ஒரு ஆண்டாக பிரச்னை உள்ளது. மத்திய அரசின் அறிவிப்புக்கு பிறகு இந்த சிரமம் மேலும் அதிகரித்துள்ளது’’ என்று 1951ம் ஆண்டு முதல் ஹஜி சகூர் என்ற பால் பண்ணை நடத்தி வரும் அதன் உரிமையளர் சன்வர் அலி தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘ கோ சாலைகளில் பால் உற்பத்தி குறைந்துள்ளது. முன்னதாக எனது பண்ணையில் இருந்து 3 ஆயிரம் லிட்டர் பால் வழங்கப்படும். தற்போது ஆயிரம் லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறது. நான் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். வருவாயை இழந்தால் நான் எப்படி சம்பளம் கொடுப்பேன். எதிர்காலம் கேள்விகுறியாகியுள்ளது’’ என்றார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article