பிரசல்ஸ்: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியத்தில், வளர்ப்புப் பிராணியான பூனைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், உலகிற்கு மற்றொரு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சீனாவில் முதலில் தொற்றத் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலகையே ஒரு கை பார்த்துவருகிறது. வல்லரசு நாடு என்று சொல்லப்படும் அமெரிக்கா, இப்போது கொரோனா தாக்கத்தால் நிலைகுலைந்து போயுள்ளது.
தற்போதுவரை மனிதர்களிடம் இருந்து சக மனிதர்களுக்கு மட்டுமே கொரோனா தொற்று பரவி வந்த நிலையில், முதன்முறையாக ஹாங்காங்கில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களிடம் இருந்து 2 நாய்களுக்கு கொரோனா தொற்று பரவியது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் பெல்ஜியத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரிடம் இருந்து, அவரது வளர்ப்பு பிராணியான பூனைக்கு கொரோனா பரவியுள்ளது.
பூனைக்கு கொரோனா தொற்று இருப்பதை லீஜ் கால்நடை மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். பெல்ஜியம் அரசின் தொற்றுநோய் செய்தி தொடர்பாளரான டாக்டர் இம்மானுவேல் ஆண்ட்ரே கூறியதாவது, “இது தனிமைப்படுத்தப்பட்ட வழக்கு ஆகும். விலங்குகளுக்கும் பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்புக்கு பின்னர் கொரோனா ஏற்படலாம்” என்றார்.