டில்லி,
நாட்டில் மீண்டும் பண பரிவர்த்தனை அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக டிஜிட்டல் பண பரிவர்த்தைனை மெதுவாக குறைந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து பண வரி (Cash tax) விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8ந்தேதி பழைய ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து கருப்பு பணத்தை ஒழிக்கவும், கள்ளப்பணத்தை கட்டுப்படுத்தவும் டிஜிட்டல் முறைக்கு மாற வலியுறுத்தினார். பணமில்லா பரிவர்த்தனைக்கு மக்களை மாறும்படி வலியுறுத்தினார். ஆனால், அதற்கான அடிப்படை கட்டமைப்புகள் சரிவர செய்யப்படாததால் மக்கள் கடும் துயரத்திற்கு ஆளாகினர்.
இதைத்தொடர்ந்து மக்கள் கார்டு பண பரிமாற்றத்திற்கு மாற தொடங்கினர். ஆனால், தற்போது பணம் ஓரளவுக்கு புழக்கத்தில் வந்துள்ளதால், கார்டு பரிவர்த்தனை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தொழிற்நிறுவனங்களின் உரிமையாளர்கள் கூறியதாவது,
இந்திய அரசு பணமதிப்பிழப்பு அறிவித்த பிறகு சுமார் 30 சதவிகிதம் வரை டிஜிட்டல் பண பரிவர்த்தைனை அதிகரித்தது. இது கடந்த சில வாரங்களாக குறைந்துள்ளது. ஆரம்ப நாட்களில் அதிகரித்து வந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனை கடந்த சில நாட்களாக மெதுவாக குறைந்து வருகிறது.
தற்போது மக்களிடம் பணம் தாராளமாக புழங்குவதால் டிஜிட்டல் பண பரிவர்த்தனை குறைந்துள்ளதாக தொழிற்சாலை நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
ஆனால், இந்திய அரசு பண பரிவர்த்தனைகளை குறைக்க எண்ணுகிறது. இதற்காக கேஷ் டாக்ஸ் (cash Tax) எனப்படும் பண வரி விதிக்கவும் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து வரும் பிப்ரவரி 1ந்தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.