சென்னை: பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக அரசின் அமைச்சராக இருந்து வரும் பொன்முடி, ஏற்கனவே ஊழல் முறைகேடு வழக்கில் 3ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று தனது அமைச்சர் பதவியை இழந்த நிலையில், பின்னர், அந்த தீர்ப்பு தடை விதிக்கப்பட்டதால், அவர் மீண்டும் அமைச்சர் பொறுப்பு ஏற்றார்.

அவர்மீதான பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், சமீபத்தில், (ஏப்ரல் 8ம் தேதி 2025) அன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி, சைவம் மற்றும் வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இது தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து புகார் குறித்தும் திமுக அரசின் காவல்துறை புகாரை பதிய மறுத்த நிலையில், உயர்நீதிமன்றம் தாமாகவே வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.
இந்த நிலையில், பொன்முடியை அமைச்சர் பதவியில் நீக்கக் கோரி வழக்கறிஞர் ஜெகன்நாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், மக்கள் பிரதிநிதி என்ற முறையில், அமைச்சர் பொன்முடியின் பேச்சு, அரசியல் சாசனத்திற்கு எதிரானது. பொன்முடியின் பேச்சு கருத்து சுதந்திரத்தின் கீழ் வராது, குறிப்பிட்ட மதத்தை பற்றி அவதூறாக பேசுவது கருத்து சுதந்திரம் அல்ல.
மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் அனைத்து மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு பொன்முடிக்கு உள்ளது. அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்கள் அளித்தும், காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பதவி பிரமாணத்தை மீறி செயல்பட்ட அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி இந்த வழக்கு தொடர்பாக மனுதாரர் தாக்கல் செய்துள்ள கூடுதல் மனுவில், வழக்குக்கு தொடர்பில்லாத முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்துள்ளதாகவும் அவற்றை நீக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார். இதை மனுதாரர் ஜெகன்நாத் ஏற்றுக் கொண்டதை அடுத்து, அரசு தலைமை வழக்கறிஞர் சுட்டிக்காட்டிய பகுதிகளை நீக்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு தொடர்பாக ஜூன் 5ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 19ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
[youtube-feed feed=1]