புனே:

மகாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த பெண் விஞ்ஞாணி வீட்டில் பிராமணர் என்று பொய் கூறி சமையல் பணியாற்றிய பெண் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தன்னை அய்யர் என்று கூறி தனது மத நம்பிக்கையை புன்படுத்திவிட்டதாக அந்த விஞ்ஞாணி புகார் செய்துள்ளார்.

மேத்தா கோலே என்பவர் இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் போலீசில் அளித்துள்ள புகாரில், ‘‘எங்களது வீட்டு விசேஷங்கள் உள்ளிட்ட இதர நிகழ்வுகளில் சமைக்க பிராமணர் சமூகத்தை சேர்ந்தவர் எங்களுக்கு தேவைப்பட்டார். கடந்த ஆண்டு நிர்மலா யாதவ் என்பவர் இந்த பணியில் சேர முயற்சித்தார்.

நிர்மலா குல்கர்னி என்று தன்னை அவர் அறிமுகம் செய்து கொண்டார். இதையடுத்து அவர் சமையல் பணிக்கு அமர்த்தப்பட்டார். விசேஷ நாட்களில் நிர்மலா வீட்டிற்கு சென்று சமையல் செய்து கொடுத்து வந்தார்’’ என்றார்.

இந்நிலையில் நிர்மலா பிராமணர் சமூகத்தை சேர்ந்தவர் இல்லை என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது. நிர்மலா கூறியது பொய் என்று தெரிந்ததால் தனது மத நம்பிக்கை புண்படுத்தப்பட்டதாக கோலே தெரிவித்துள்ளார்.

இது குறித்து விளக்கம் கேட்க கோலே நிர்மலா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவரது உண்மையான பெயர் நிர்மலா யாதவ் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து கேட்டபோது கோலேவை நிர்மலா திட்டியுள்ளார்.

இது குறித்து கோலே அளித்த புகாரின் பேரில் சின்காத் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.