நீட் மோசடி தொடர்பாக குஜராத் மாநிலத்தில் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுவது தொடர்பாக தமிழக அரசு ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தது.
இதை தக்காளி சட்னி போல் ஒதுக்கிய நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வில் வடமாநிலங்கள் பலவற்றிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வு குளறுபடி குறித்து உச்சநீதிமன்றம் துரித விசாரணை நடத்தியது.
இந்த நிலையில் குஜராத் மாநிலம் கோத்ராவில் உள்ள ராய் ஓவர்சீஸ் பயிற்சி மையம் நீட் தேர்வில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இந்த பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்களிடம் தலா ரூ. 10 லட்சம் வாங்கிக்கொண்டு நீட் விடை தாள்களை தயார் செய்து தருவதாக உறுதியளித்துள்ளது.
அதன்படி உ.பி., ம.பி., ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே நீட் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை அழைத்துவந்து ஆள்மாறாட்டம் செய்து மோசடியாக தேர்வு எழுதியது தெரியவந்தது.
இதன் மூலம் ரூ. 12 கோடி வரை வசூலித்த இந்த பயிற்சி மையம் குறித்த தகவல் காவல்துறையினருக்கு தற்போது கிடைத்ததை அடுத்து அவர்கள் இந்த மையத்தை கண்காணிக்க தொடங்கியுள்ளனர்.
இதில் அந்த மையத்தின் உரிமையாளர் உள்ளிட்ட மூன்று பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே 1500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் மேலும் பல்வேறு மோசடிகள் தினம் தினம் அம்பலமாகி வருவதை அடுத்து இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வு முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.