சென்னை: சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கு எட்டு வாரத்திற்குள் முடிக்கப்படும் என சிபிசிஐடி உறுதி அளித்துள்ளது.

தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணை செய்து வருவதால் சிபிசிஐடி போலீசார் விசாரணை அறிக்கையை விரைவாக தாக்கல் செய்துள்ளனர்.

​வழக்கு மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு டிஜிபி மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணை இன்னும் 8 வாரத்திற்குள் முடிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி பதில் அளித்தது.

பாலியல் புகார் குறித்து இது வரை 87 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி  தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து வழக்கை தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த மாதம் புகார் கொடுக்கப்பட்டது. புகார் தொடர்பாக விசாரிக்க கூடுதல் தலைமைச் செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது, குறிப்பிடத்தக்கது.