
புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் தொடர்பான வழக்கை, அடுத்த வாரம் விசாரிப்பதாக உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.
இஸ்ரோவின் முக்கியமான ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாட்டிற்கு விற்க முயன்றதாக 1994ம் ஆண்டு, நம்பி நாராயணனுக்கு எதிராக கேரளாவில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சிறையில் 50 நாட்கள் இருந்த நம்பி நாராயணன் பின் விடுதலை செய்யப்பட்டார். காவல்துறை விசாரணையின்போது அவர் சித்ரவதை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கை சிபிஐ விசாரித்து ‘நம்பி நாராயணன் குற்றமற்றவர்’ என நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து தனக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் பொய் வழக்கு தொடர்ந்த கேரளாவின் உயர் காவல்துறை அதிகாரிகள் சி.பி.மேத்யூ, கே.கே.ஜோஷ்வா மற்றும் எஸ்.விஜயன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நம்பி நாராயணன் வழக்கு தொடர்ந்தார். இழப்பீடும் கோரியிருந்தார்.
கடந்த 2018ம் ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க கேரள அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், காவல்துறை அதிகாரிகள் மீதான புகாரை விசாரிக்க முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையில் மூன்று பேர் நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு, தன் அறிக்கையை சமீபத்தில் தாக்கல் செய்துள்ளது. “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும்” என மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வலியுறுத்தினார். இதையடுத்து, இந்த வழக்கை அடுத்தவாரம் விசாரிப்பதாக நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]