திருவனந்தபுரம்
பத்திரிகையாளர்கள் மீது மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
நடிகை பாலியல் கொடுமை தொடர்பாக கேரள அரசு நியமித்த ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான நிலையில், கேரளாவின் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது நடிகைகள் பலரும் அடுத்தடுத்து பாலியல் புகார்களை முன்வைத்து வருகின்றனர். 40 ஆண்டுகளாக கேரள திரை உலகில் உள்ள முக்கிய நடிகரான முகேஷ் மீது மூன்று நடிகைகள் பாலியல் புகார் தெரிவித்துள்தால் கொல்லம் தொகுதி எம்.எல்.ஏ. பொறுப்பில் இருந்து முகேஷ் விலக வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க. குரல் கொடுத்தது.
இது குறித்து கேரள திரைத்துறை அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த பா.ஜ.க. எம்.பி. சுரேஷ் கோபியிடம், பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
சுரேஷ் கோபி,
“ஹேமா கமிஷன் அறிக்கை மூலம் ஊடகங்களுக்கு தற்போது தீனி கிடைத்து உள்ளது. ஆனால், ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். திட்டமிட்டு சினிமா என்ற மிகப்பெரிய இயக்கத்தை அழிக்க முயற்சி நடக்கிறது. நடிகைகள் அளித்துள்ள பாலியல் புகாருக்கான ஆதாரங்கள் என்ன?.
புகார்கள் தற்போது குற்றச்சாட்டு வடிவில் உள்ளன. குற்றவாளிகள் யார் என்பதை நீதிமன்றம்தான் தீர்வு செய்யும். நான் தனிப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இங்கு வந்தேன். மலையாள நடிகர் சங்க அலுவலகத்தில் இருந்து நான் வரும் போது, இந்த கேள்விகளை கேட்கலாம்”
என்று பதிலளித்தார்.
பிறகு திருச்சூர் வந்த சுரேஷ் கோபியிடம் பத்திரிகையாளர்கள் மீண்டும் இது குறித்து கேள்வி கேட்டபோது அவர்ஆத்திரம் அடைந்தார்.
கேரள பாஜக தலைவர் கே.சுரேந்திரன் பத்திரிகையாளர்களிடம் ,
“சுரேஷ்கோபி கூறியது பா.ஜனதாவின் கருத்து அல்ல. பாலியல் குற்றச்சாட்டுகள் ஊடகவியலாளர்கள் வெளியிட்டது அல்ல. சுரேஷ் கோபி நடிகர் என்ற முறையில், அவரது கருத்துகளை வெளியில் கூற உரிமை உள்ளது.
ஆனால், பா.ஜனதாவின் கொள்கைகள் எப்போதுமே நேர்மையின் பக்கம் இருக்கும். பாலியல் புகாரில் சிக்கிய நடிகர் முகேஷ் எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ய வேண்டும். பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை பா.ஜனதா ஒருபோதும் ஏற்காது”
என்றார்.
நேற்று முன் தினம் தன்னை வழிமறித்த பத்திரிகையாளர்கள் மீது மத்திய மந்திரி சுரேஷ் கோபி திருச்சூர் நகர காவல்துறை ஆணையரிடம் பத்திரிகையாளர்கள் தனது பாதுகாப்பு அதிகாரியை கடமைகளை செய்ய விடாமல் அச்சுறுத்தியதாகவும், இடையூறு விளைவித்ததாக குற்றம் சாட்டினார். தன்னை காரில் ஏற விடாமல் தடுத்ததாக சுரேஷ் கோபி அளித்த புகாரின் அடிப்படையில், திருச்சூரில் உள்ள கிழக்கு காவல் நிலையத்தில் பத்திரிகையாளர்கள் மீது நேற்று எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.