டெல்லி: ரத்து செய்யப்பட்ட தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்படுவது குறித்து விளக்கம் அளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66ஏ கடந்த 2015ல் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. ஆனால், இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிர்ச்சி தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட பிரிவின்கீழ் எப்படி வழக்குப்பதிவு செய்கிறீர்கள் என கடுமையாக சாடியிருந்தது. அதுமட்டுமல்லாமல் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். ஆனால், மத்தியஅரசு மாநில அரசுகளிடம் தான் விவரம் கேட்க வேண்டும் என்று கூறியது.
இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66ஏ கடந்த 2015ல் ரத்து செய்யப்பட்ட நிலையில், அந்த பிரிவில் எப்படி வழக்கு பதிவு செய்ய முடியும் என்பது குறித்து விளக்கம் அளிக்க அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.