டெல்லி:

ந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமாகி உள்ள நிலையில், கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாற்று மருத்துவ முறைகளை ஆராய உத்தரவிட கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை  விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்தது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலக சுகாதார நிறுவனம் பரிட்சார்த்த முறையில் நான்கு மருந்துகளை பரிசோதனைக்குட்படுத்தி உள்ளது. இந்நிலையில், இந்நோய் தொற்றை தடுக்க தடுப்பு மருந்து கண்டுபிடிக்க எத்தனை நாட்கள் என்பது குறித்து எந்தவொரு நாடும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இதற்கிடையில், இந்தியாவின் மாற்று மருத்துவ முறைகளில் ஒன்றான சித்த மருத்துவத்தில் கபசுர குடிநீர் ஒரு மருந்தாக முன்வைக்கப்பட்டது. அதுபோல ஓமியோபதி மருந்துகளும் அறிவுறுத்தப்பட்டன. இந்த மருந்துகள் உட்கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும் என்றும், இதனால் வைரஸ் தொற்று ஏற்படுவதை தடுக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

இந்த நிலையில், கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாற்று மருத்துவ முறைகளை ஆராய உத்தரவிட கோரி உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் காணொளி காட்சி மூலம் விசாரிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து உத்தரவிட்ட நீதிபதிகள்,

கொரோனா ஒரு புதிய வகை வைரஸ் என்பதால் மாற்று மருத்துவத்தை தற்போது சோதித்துப் பார்க்க முடியாது, கொரோனாவுக்கான தடுப்பு ஊசியை மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடிக்கும் வரையில் பொறுத்திருங்கள்  என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.