சென்னை
ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை உரையை புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவியை ஜனாதிபதி திரும்ப பெற வலியுறுத்தியும் அதிமுக – பாஜக கள்ளக் கூட்டணியைக் கண்டித்தும் திமுக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடந்த ஆர்பாட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., எம்.பி.,க்கள் தயாநிதி மாறன், கனிமொழி சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் தென் சென்னை, வட சென்னை மற்றும் மத்திய சென்னை மாவட்ட திமுக நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சென்னையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 3,000 பேர்மீது சைதாப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது அனுமதியின்றி கூடுதல் உள்பட 2 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில்பதிவு செய்யப்பட்டுள்ளது.