திருப்பதி

திருப்பதி கோவில் ரூ.300 சிறப்புத் தரிசன டிக்கட் ரூ.5000க்கு கள்ளச் சந்தையில் விற்றதாக வங்கி மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் 6 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடு காரணமாகத் திருப்பதி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்யத் தடை விதிக்கப்பட்டது.  தற்போது கொரோனா குறைந்துள்ளதால் தினசரி 22,000 பேருக்கு தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.   இவர்களில் 8000 பேர் ஆனலைன் மூலம் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கட் பெற்றவர்கள் ஆவார்கள்.  தவிர விஐபி, பிரேக் , வாணி அறக்கட்டளை போன்றவற்றின் மூலம் 6000 பேருக்கு ரூ.300 டிக்கட் வழங்கப்படுகிறது.

தவிர சபதம் தரிசன சீட்டுக்களுக்கு தற்போது கிராக்கி உள்ளது.  இவை அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சிபாரிசு அடிப்படையில் வழங்கப்படுகிறது.  இதில் விஐபி பிரேக் தரிசனத்துக்கு ஒரு நாள் தங்க வேண்டிய நிலையில் இந்தச் சபதம் என்னும் டிக்கட்டுகள் மூலம் வெறும் அரை மணியில் தரிசனம் செய்து விட்டு வர முடியும்..  எனவே இவை கள்ளச் சந்தையில் விற்கப்படுகின்றன.

இதை அறிந்த தேவஸ்தான கண்காணிப்பு பிரிவினர் சபதம் வழியாகத் தரிசனம் செய்வோரில் சிலரை விசாரித்துள்ளனர்.  இந்த விசாரணையில் கடந்த 23 ஆம் தேதி அன்று வெளியூர் பக்தர்களுக்கு ரூ.300 டிக்கட்டை ரூ.5000 என 7 பேருக்கு ரூ.35000 க்கு விற்கப்பட்டது தெரிய வந்தது.  இதையொட்டி வங்கி ஊழியர் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் என 6 பேர் மீது வழக்கு  பதியப்பட்டு விசாரணை நடக்கிறது.

இந்த விசாரணை மூலம் இதில் ஈடுபட்டுள்ள மேலும் பல தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் இடைத் தரகர்கள் சிக்குவார்கள் எனக் கூறப்படுகிறது.  தவிர இதைப் போல் மேலும் பல டிக்கட்டுகள் விற்பனை செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவரும் எனவும் எதிர்பார்ப்பு உள்ளது.