டில்லி,

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள டில்லி ஆம்ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் 20 பேரை ஜனாதிபதி தகுதி நீக்கம் செய்துள்ள நிலையில், தற்போது,  அரியானா மாநில 4 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கோரி பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்துகொண்டு, ஆதாயம் பெறும் வகையில் வேறு பதவியில் இருந்து வந்த ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 20 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிபாஜக, காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். அதைத்தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் வேண்டுகோளை ஏற்று, ஜனாதிபதி அவர்களை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்திலும் இரட்டை பதவிகள் வகித்து வருவதாக 11 பாஜ எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய கோரி காங்கிரஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதைடுத்து, தற்போது அரியானா மாநிலத்தும் இந்த பிரச்சினை பூதாகாரமாக உருவெடுத்து உள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு பாரதியஜனதா கட்சியை சேர்ந்த ஷியாம் சிங் ரானா, பாக்சிஷ் சிங் விர்க், சீமா திரிகா மற்றும் கமல் குப்தா ஆகியே 4 பேர் பாராளுமன்ற செயலர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், நியமனத்தை ஐகோர்ட்டு ரத்து செய்தது. அதையடுத்து, தங்களது பதவியில் இருந்து விலகுவதாக முதல்வர் மனோகர்லால் கட்டாரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர்.

இந்நிலையில், தற்போது இந்த விவகாரம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. ஆம்ஆம்தி விவகாரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டது போன்று, பாஜ எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று,  வழக்கறிஞர் ஜாக்மோகன் சிங் பாத்தி வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அரியானா மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், பாராளுமன்ற செயலாளர் களாக நியமனம் செய்யப்பட்டது அரசியலமைப்பு சட்டத்துக்கு  விரோதமானது, தகுதியற்றது. எனவே, 4 எம்.எல்.ஏ.க்களையும்  உடனடியாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும், அவர்களுக்கு எந்தவித பணிப்பலனும் கொடுக்கக்கூடாது  எனவும்  வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.