டெல்லியைச் சேர்ந்த சௌரவ் மால் என்ற 24 வயது இளைஞர் ஸ்மோட்டோ செயலியின் பிரத்யேக ஸ்மோட்டோ லெஜெண்ட்ஸ் சேவை மூலம் டெல்லியின் ஜும்மா மசூதி பகுதியில் இருந்து சிக்கன் கபாப் ரோல், கைலாஷ் காலனியில் இருந்து ட்ரிபிள் சாக்லேட் சீஸ் கேக் மற்றும் ஜனக்பூராவில் இருந்து வெஜ் சாண்ட்விச் ஆகிய மூன்று உணவுவகைகளை ஆர்டர் செய்திருந்தார்.

அதோடு, டெல்லியில் இருந்து சுமார் 529 கி.மீ. தொலைவில் உள்ள லக்னோவில் இருந்து ‘கலௌட்டி கபாப்’ என்ற உணவு வகையையும் ஆர்டர் செய்திருந்தார்.

ஸ்மோட்டோ லெஜெண்ட்ஸ் சேவை மூலம் கொல்கத்தா, ஹைதராபாத், லக்னோ, ஜெய்ப்பூர், பெங்களூரு, சென்னை, மதுரா மற்றும் ஆக்ரா ஆகிய நகரங்களில் இருந்து எந்த ஒரு உணவுவகையயும் வாடிக்கையாளர் ஆர்டர் செய்யலாம் எத்தனை தூரமாக இருந்தாலும் விரைவாக டெலிவரி செய்யப்படும் என்று விளம்பரப்படுத்தப்பட்டது.

லெஜெண்ட்சின் இந்த சேவையை அறிந்த சௌரவ் மால் லக்னோவில் இருந்து ‘கலௌட்டி கபாப்’ உணவு வகையையும் ஆர்டர் செய்திருந்தார்.

ஆனால் இவர் எதிர்பார்த்ததை விட மின்னல் வேகத்தில் 30 நிமிடத்தில் ஸ்மோட்டோ பேக்கிங்-கில் ‘கலௌட்டி கபாப்’ வந்து சேர்ந்ததைக் கண்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார் சௌரவ்.

இதுகுறித்து ஸ்மோட்டோ நிறுவனத்திடம் விசாரித்த சௌரவிற்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. இவை அனைத்தும் அந்தந்த பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவு என்றும் ஆர்டர் செய்தவுடன் அவற்றை சூடுபடுத்தி தயார் செய்து ஸ்மோட்டோ பேக்கிங்-கில் டெலிவரி செய்வதும் தெரியவந்தது.

ஆனால், ஸ்மோட்டோ லெஜெண்ட்ஸ் சேவை குறித்த விளம்பரத்தில் இதுகுறித்த எந்தவொரு தகவலும் தரப்படாததை அடுத்து 2023 அக்டோபர் 14ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து ஸ்மோட்டோ நிறுவனத்திடம் இருந்து மேலும் விளக்கம் கேட்டிருந்தார்.

இதற்கான போதுமான விளக்கம் தரப்படாததை அடுத்து ஸ்மோட்டோ நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்ய முடிவு செய்த சௌரவ் மால் கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்கு தொடர்ந்ததை அடுத்து ஸ்மோட்டோ லெஜெண்ட்ஸ் சேவை வாடிக்கையாளர்களை ஏமாற்றும் ஒரு மோசடி திட்டம் இதனை முடக்க வேண்டும் என்று டெல்லி நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை ஸ்மோட்டோ நிறுவனம் மறுத்துள்ள நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை வரும் மார்ச் மாதம் 20 ம் தேதி நடைபெற உள்ளது.