சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு ரத்து செய்து தமிழகஅரசு அறிவித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரசு உத்தரவுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் தமிழகத்தில் தீவிரமாக இருந்ததால், மாணாக்கர்களின் நலனை கருத்தில்கொண்டு, 12 ம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதாக தமிழகஅரசு ஜுன் 5ந்தேதி அறிவித்தது. அதைத்தொடர்ந்து மாணாக்கர்களுக்கு மதிப்பெண்கள் வழங்க உரிய வழிமுறைகளை வெளியிட குழு ஒன்றை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் 12-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்ததை எதிர்த்து ராம்குமார் ஆதித்தன் என்ற வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். மனுவில், தற்போது பெரும்பாலான பள்ளிகளில் வகுப்புகள் முழுமையாக நடைபெறாத சூழலில், மேற்படிப்பு வகுப்புகளின் கல்வி சேர்க்கை தகுதியை நிர்ணயம் செய்து மேற்படிப்பு கல்வி நிறுவனங்களை நெறிப்படுத்தும் யுஜிசி, மெடிக்கல் கவுன்சில், ஏஐசிடிஇ, நர்சிங் கவுன்சில், டெண்டல் கவுன்சில், பார் கவுன்சில் உடன் கலந்து முடிவு எடுக்காமலும் தமிழ் நாடு அரசின் கல்வித் துறை பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வை ரத்து செய்தது தவறு என்று தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, இதில் எந்த ஒரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் இதில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தெரிவித்த நீதிபதிகள், மனுவுக்கு வரும் 23-ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.