ஸ்ரீநகர்:

“காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதை தடுக்கும் வகையில் தரைப்படை குண்டுவீச்சு நடத்த வேண்டும்” என வி.ஹெச்.பி அகில உலக செயல் தலைவர் பிரவீன் தொகாடியா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் பேசுகையில், “காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உரி மற்றும் குப்வாரா ராணுவ முகாம்களில் தாக்குதல் நடந்ததை தொடர்ந்து தரைப்படை குண்டு வீச்சு தாக்குதலை அரசு நடத்த வேண்டும்.

ராணுவத்தின் மீதான தாக்குதல் மற்றும் கல்வீச்சு சம்பவ்ஙகளை போர் என கருத வேண்டும். அந்த பகுதிகளில் தரைப்படை குண்டு தாக்குதல் நடத்த வேண்டும்” என்று குஜராத் மாநிலம் வதோராவில் நடந்த பர்சுராம் ஜெயந்தி விழாவில் தொகாடியா பேசினார்.

“பாதுகாப்பு படையினர் மீது போர் நடத்தும் பயங்கரவாதிகளை ஒழிக்க வேணடும். மக்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே விரோதம் காஷ்மீரில் அதிகரித்து வருகிறது. லெனினிய கொள்கை மற்றும் தரைப்படை குண்டுவீச்சு மூலம் இதை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். தவறினால் எதிரிகள் நாட்டின் இதர மாநிலங்களுக்கு பரவி நாட்டை பல துண்டுகளாக வெட்டி விடுவார்கள்” என்று தொகாடியா தெரிவித்துள்ளார்.

“கடந்த 2015ம் ஆண்டில் ரூ. 80 ஆயிரம் கோடி மதிப்பிலான மேம்பாட்டு திட்டங்களின் தொகுப்பை பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நிதியை நாட்டின் பல மாநிலங்களில் பாதித்துள்ள விவசாயிகள் நல திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும். விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சூழல் நிலவுகிறது” என்றார் தொகாடியா.