டில்லி:
தேர்தல் அப்சர்வர்கள் (பார்வையாளர்கள்) கவனமாக செயலாற்ற வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவுரை கூறினார்.
17வது பாராளுமன்றத்தை கட்டமைக்கும் வகையில் நாடு முழுவதும் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலின், வாக்கு எண்ணிக்கை மே 23ந்தேதி நடைபெற உள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், மத்திய தேர்தல் பார்வையாளர்கள் சுமார் 1,800 பேருக்கு, தேர்தல் பணிகள் தொடர்பான முதல் விளக்க கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அப்போது, தேர்தல் பார்வை யாளர்களின் உபயோகத்துக்காக “அப்சர்வர் ஆப்” என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
இதை அறிமுகம் செய்து வந்து பேசிய சுனில் அரோரா, இந்த ஆப் மூலம் முக்கிய தகவல்கள், அவசர செய்திகள் உள்ளிட்டவற்றை, தேர்தல் ஆணையம் தேர்தல் பார்வையாளர்களுக்கு எளிதில் பரிமாற்றக் கொள்ளும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது என கூறினார்.
மேலும், நடைபெற உள்ள மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல் நடைமுறைகளில் தவறு நிகழாமல் இருப்பதை தேர்தல் பார்வையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும், மிக கவன முடன் செயல்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
சுதந்திரமாக, வெளிப்படையாக தேர்தல் நடத்துவது மட்டுமின்றி, உரிய நெறிமுறைகள் பின்பற்றப் படுகிறதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.