துமாத் , குஜராத்
குஜராத்தில் விபத்துக்குள்ளான ஒரு வாகனத்தில் பெட்டி பெட்டியாக பியர் இருந்துள்ளது.
இந்தியாவில் மிகக்குறைவான மாநிலங்களிலேயே மது விலக்கு உள்ளது. அவைகளில் குஜராத் மாநிலமும் ஒன்று. தற்போது மது விலக்கு சட்டங்கள் குஜராத்தில் கடுமையாக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுவை உற்பத்தி செய்வோர், விற்போர், வாங்குவோர், எடுத்துச் செல்வோர் அனைவருக்கும் 10 வருட கடுங்காவல் சிறையுடன் ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என மாற்றப்பட்டுள்ளது.
அகமதாபாத் – வடோதரா நெடுஞ்சாலையில் துமாத் என்னும் கிராமத்தின் அருகே வேகமாக வந்த வெள்ளை நிற மாருதி கார். ஒன்று கருப்பு கலரில் இருந்த மெர்சிடிஸ் பென்ஸ் காரில் வேகமாக மோதியது. மோதிய வேகத்தில் மாருதி காரில் இருந்து ஒரு பியர் கேன் வெளியே சிதறியது. அதற்குள் அங்கு கூட்டம் கூடவே, மாருதியில் வந்த இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
மாருதி வேனுக்குள் பெட்டி பெட்டியாக டின் பியர் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இந்த செய்தி பலருக்கும் பரவவே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் காரிலிருந்த பியர் கேன்களை அள்ளிக் கொண்டு ஓடி விட்டனர். போலீசார் வந்த போது கிழிந்த அட்டை பெட்டிகளும், விபத்துக்குள்ளான கார்கள் மட்டுமே இருந்தன. போலீசார் வண்டியின் சொந்தகாரர் மற்றும் வண்டியில் வந்தவர்களை தேடி வருகின்றனர்.