புதுடெல்லி: வங்கித் துறையில் மேற்கொள்ளப்படும் தவறான முடிவுகள் மற்றும் கார்களில் கட்டாயமாக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்களான காற்றுப் பைகள் மற்றும் ஏபிஎஸ் போன்றவைகளால், கார்களின் விலையை சாமானியர்கள் வாங்க இயலாத அளவிற்கு அதிகரித்துவிட்டதாக மாருதி நிறுவன தலைவர் ஆர்சி பார்கவா தெரிவித்துள்ளார்.
அவர் கூறுவதாவது, “பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் மீது விதிக்கப்படும் அதிகபட்ச வரிகள், சாலை மற்றும் பதிவுக் கட்டணங்களில் மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட உயர்வுகள் ஆகியவை கடைசியில் கார் வாங்குவோரின் தலையில்தான் விடிகின்றன.
தற்போது ஆட்டோமொபைல் தொடர்பாக ஜிஎஸ்டி வரியில் செய்யப்பட்ட மாற்றங்கள் பெரிய பலனை தராது என்றும், அதிக வரிவிதிப்பு தவிர்க்கப்பட வேண்டியதாகும்.
ஆட்டோமொபைல் துறைக்கான ஜிஎஸ்டி வரியை 28% என்பதிலிருந்து 18% என்பதாக குறைக்க வேண்டுமென அரசுக்கு கடந்தகாலங்களில் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது. ஒரு இருசக்கர வாகனத்தை ஓட்டும் ஒரு நபர், நான்கு சக்கர வாகனத்திற்கு மாறுவதற்கு ஆசைப்பட்டால், தற்போதைய நிலையில் அவரால் தனது ஆசையை நிறைவுசெய்துகொள்ள இயலாத நிலையே தற்போது உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, ஆட்டோமொபைல் துறையில் விற்பனைகள் கடுமையாக சரிந்துள்ளன. ஆல்டோவின் விற்பனை 50% சரிந்துவிட்டது” என்றார் பார்கவா.