புதுக்கோட்டை

சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதுக்கோட்டை மாவட்டம் ஆண்டியப்ப ஐயனார் கோவிலில் தேரோட்டத் திருவிழா நடந்துள்ளது.

sample pic

கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள கொப்பம் பட்டி கிராமத்தில் ஆண்டியப்ப ஐயனார் கோயில் தேரோட்டத் திருவிழா நடந்தது. பின்னர் திருவிழா நடை பெற வில்லை.  இதைத் தொடர்ந்து கிராம மக்கள் சார்பில் ஒன்றரை கோடி மதிப்பில் புதிய வைரத்தேர் ஒன்று செய்யப்பட்டு கடந்தாண்டு வெள்ளோட்டமும் நடத்தப்பட்டு நேற்று தேரோட்டம் நடை பெற்றது.

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். கிராம மக்கள் 70 ஆண்டுகளுக்குப் பின் நடை பெற்ற இந்த தேரோட்டத்தை விமர்சையாக கொண்டாடத் தனியார் ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு ஏற்பாடு செய்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து வரவழைக்கப்பட்ட ஹெலிகாப்டர் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று தரையிறங்கியது.

அதன் பின்னர் மலர்களை ஏற்றிச்சென்று ஹெலிகாப்டர் கொப்பம்பட்டி வந்தது.  தெற்கு வீதியில் வைரத்தேர் வந்து கொண்டிருந்த போது அதன் மீது ஹெலிகாப்டர் மூலம் ரோஜா உள்ளிட்ட மலர்களை மக்கள் தூவி உற்சாகமாகக் கொண்டாடினர். மீண்டும் ஹெலிகாப்டர் ஆயுதப்படை மைதானம் வந்து அங்கிருந்து பெட்ரோல் நிரப்பிக்கொண்டு மீண்டும் பெங்களூர் புறப்பட்டுச் சென்றது.