சிட்னி: எதிர்வரும் டெஸ்ட் தொடரை முன்னிட்டு, ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில், முதல் நாள் முடிவில் இந்திய அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களை எடுத்துள்ளது.

மொத்தம் 3 நாட்கள் நடைபெறும் ‍இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரகானே, முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். ஆனால், அவர் நினைத்ததுபோன்று அமையவில்லை இந்திய அணியின் பேட்டிங்.

துவக்க ஜோடியான சுப்மன் கில் மற்றும் பிரித்வி ஷா ஆகிய இருவரும் டக் அவுட் ஆயினர். அனுமன் விஹாரி 15 ரன்கள் எடுக்க, புஜாரா கேப்டன் ரகானேவுடன் நிலைத்து நின்று அரைசதம்(54) அடித்தார்.

ஆனால், புஜாரா தவிர்த்து, மற்ற பேட்ஸ்மென்கள், ரகானேவுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. சஹாவும் டக்அவுட் ஆக, மனந்தளராத ரகானே நிலைத்து நின்று ஆடி சதமடித்தார். அவர், மொத்தமாக 108 ரன்களை அடித்து இறுதிவரை களத்தில் நிற்கிறார். அவருடன் 9வது விக்கெட்டாக சிராஜ் நிற்கிறார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி, 8 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்களை அடித்துள்ளது.