பால்மீகி: பொய் சொல்வதில் மோடியை வெற்றி பெற முடியாது என்று ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார்.
பீகாரில் பால்மிகி நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
பணமதிப்பிழப்பு, லாக்டவுன் ஆகியவற்றின் நோக்கமே சிறு தொழில்கள், சிறு விவசாயிகள், வர்த்தகர்களை அழிப்பதே ஆகும். இப்போதும் கூட பிரதமர் மோடி 2 கோடி இளைஞர்களுக்கு வேலை தருவேன் என்கிறார். தாம் சொன்னது பொய் என்று அவருக்கே தெரியும்.
பிரதமர் மோடி இங்கு வந்து 2 கோடி பேருக்கு வேலை தருவேன் என்றால் இங்கிருக்கும் கூட்டமே அவரை விரட்டி விடும். காங்கிரஸ் அரசில் ஊரக வேலை வாய்ப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது.
விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நாட்டை எப்படி வழி நடத்த வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் எங்களுக்கு பொய் பேச தெரியாது. பொய் பேசுவதில் மோடியுடன் போட்டியிட முடியாது என்றார்.