டில்லி,

ரிலையன்ஸ் அறிமுகப்படுத்திய ‘ஜியோ’ மொபைன் சேவையின் இலவச அழைப்புக்கு மார்ச் 31ந்தேதி வரை  இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) அனுமதி அளித்து உள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 2ந்தேதி அன்று ஜியோ அறிமுகப்படுத்தப் பட்டது.  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 42-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பல சலுகைகளுடன் ரிலையன்ஸ் ஜியோ சேவையை அறிமுகம் செய்தார் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி.

இதையடுத்து மக்கள் ஜியோவையே நாடத் தொடங்கினார்கள். இதன் காரணமாக மற்ற மொபைல் நெட்வொர்க்குகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின.  ரிலையன்ஸ் ஜியோவை எதிர்த்து,  பார்தி ஏர்டெல், வோட போன் உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள், ரிலை யன்ஸ் ஜியோ கட்டண விதிகளை மீறுவதாக டிராய் அமைப்பிடம் புகார் செய்தது.

ஆனால், டிராய் ஜியோவின் இலவச சேவையை ரத்து செய்ய மறுத்துவிட்டது. மேலும், நுகர்வோரின் பிரச்சினைகளை  நிராகரித்ததால் பார்தி ஏர்டெல், வோடபோன், ஐடியா மீது 3,050 கோடி அபராதம் விதித்தும் அதிரடியாக செயல்பட்டது.

ஏர்டெல், வோடபோன் தலா 1050 கோடியும், ஐடி 950 கோடியும் அபராதம் செலுத்தவும் டிராய் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், நுகர்வோர் சிரமத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வும், “பொது நலனுக்கு எதிராக”. செயல்பட்டால் அவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் எனவும் டிராய் எச்சரிக்கை செய்துள்ளது.

இதை எதிர்த்து பார்தி ஏர்டெல் நிறுவனமும், ஐடியா செல்லுலார் நிறுவனமும் ‘டிடிசாட்’ என்றழைக்கப்படுகிற தொலைதொடர்பு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தன.

அதில், ஜியோவின் இலவச சேவைக்கு தடை விதிப்பதுடன், இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யுமாறு டிராய்க்கு உத்தரவிட வேண்டும் என்று முறையிடப் பட்டது.

இதை விசாரித்த டிடிசாட், ஜியோவின் இலவச சேவைக்கு தடை விதிக்க முடியாது என நேற்று தீர்ப்பு அளித்தது.

இருப்பினும், இது தொடர்பான பிரச்சினைகளை மறுஆய்வு செய்து, அதன் முடிவை 2 வாரங்களில் தெரிவிக்க வேண்டும் என்று டிராய்க்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.