சென்னை: தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பீகார் மாநில அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து அறிவித்து உள்ளது. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒருசாரார் எதிர்ப்பும், மற்றொரு சாரார் ஆதரவும் தெரிவித்து வருகின்றன. சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் மக்களிடையே பிரிவினை அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், பல மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கூறி வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் ல் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக சட்ட பாதுகாப்பு இயக்கம் சார்பில் முனுசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதன் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் எனக் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு உயர்நீதிமன்றத்தில் நேற்று (செப்.,04) சென்னை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘தமிழகத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த அரசுக்கு உத்தரவிட முடியாது. ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக தமிழக அரசை தான் மனுதாரர் அணுக வேண்டும் என கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.