கனடா பிரதமர் மற்றும் லிபரல் கட்சி தலைவர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
2015 அக்டோபர் மாதம் பிரதமராக பொறுப்பேற்ற ட்ரூடோ சுமார் பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்த நிலையில் ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில், உணவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் விலைவாசி உயர்வு மற்றும் அதிகரித்து வரும் குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் கனேடிய மக்களிடம் செல்வாக்கை இழந்து வரும் ட்ரூடோ இந்த முடிவை அறிவித்துள்ளார்.
லிபரல் கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் பிரதமராக நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா நாடாளுமன்றம் ஜனவரி 27 ஆம் தேதி மீண்டும் கூடவிருந்த நிலையில் நாடாளுமன்ற கூட்டம் மார்ச் 24 ஆம் தேதி வரை நிறுத்திவைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த இடைப்பட்ட காலத்தில் லிபரல் கட்சிக்கு தலைவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
கன்சர்வேட்டிவ் உள்ளிட்ட மூன்று முக்கிய எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றம் மீண்டும் தொடங்கும் போது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் லிபரல் கட்சியை கவிழ்க்க திட்டமிட்டிருந்தன.
இந்த நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ தனது பிரதமர் பதவி மற்றும் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருப்பதை அடுத்து புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்ட உடன் ஒரு சில மாதங்களில் கனடாவில் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதேவேளையில், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் டிரம்ப் பதவியேற்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்திருப்பது கனடாவில் அடுத்த சில மாதங்களுக்கு நிச்சயமற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக ட்ரூடோ அறிவித்ததை தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக இணைப்பதை கனேடிய மக்கள் அதிகம் விரும்புகிறார்கள்.
அமெரிக்கா வழங்கிவரும் மானியங்கள் மற்றும் வர்த்தக உறவுகளை கனடா இனி அனுபவிக்க முடியாது என்பதை உணர்ந்தே ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்துள்ளார்,” என்று டிரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“கனடா அமெரிக்காவுடன் இணைந்தால், வரிகள் இருக்காது, வரிகள் குறையும், மேலும் ரஷ்ய மற்றும் சீனக் கப்பல்களின் அச்சுறுத்தலில் இருந்து அவை முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும்” என்று தனது மிரட்டல் பாணியை டிரம்ப் தொடர்ந்துள்ளார்.