ஓட்டவா: கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இன்று பதவி விலகக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவுடன் மோதல் போக்கில் செயல்பட்டு வந்த கடனா பிரதமரின் செயல் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, அவருக்கு கட்சிக்குளும், மக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்புகள் எழுந்தது. இதனால் அரசியல் களத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் இன்று (திங்கட்கிழமை) தனது பதவியை ராஜினாமா செய்யக் கூடும் என்று தி குளோப் அண்ட் மெயில் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு அக்டோபரில் நடைபெறவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ்களிடம் ட்ரூடோவின் தாராளவாதிகள் மோசமாக தோல்வியடைவார்கள் என்று கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. இதைத்தொடர்ந்து, ட்ரூடோ உடனடியாக பதவி விலக கட்சிக்குள் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இன்று அவர் பதவி விலக வாய்ப்பு உள்ளதாகவும், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமர் பதவியில் நீடிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜஸ்டின் ட்ரூடோ 2013ஆம் ஆண்டில், லிபரல் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். மேலும் சமீப காலமாக நடவடிக்கைகள், இந்தியா மீதான விமர்சனம் போன்றவற்றால், கனடா மீது உலக நாடுகள் அதிருப்தி அடைந்தன. மேலும் கட்சிக்குள் அவருக்கு நேரடியாக எதிர்ப்பு எழுந்தது. மேலும் ட்ரூடோ ஆதரவு அளித்து வரும் சீக்கிய கட்சியின் நடவடிக்கைகளும் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு சர்வதேச அரங்கில் நெருக்கடிகள் ஏற்பட்டு உள்ளதுடன், சமீபத்தில் அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட டிரம்ப், கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் 25 சதவீதம் வரி விதிப்பதாகக் கூறினார். இதனால் அதிருப்தி அடைந்துள்ள கனடா பிரதமர், தற்போது உள்நாட்டு அரசியலிலும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்.
இதற்கிடையில், அவரது அரசாங்கத்தை ஆதரித்து வந்த புதிய ஜனநாயகக் கட்சி (NDP), ஆதரவைத் தொடர மறுத்துவிட்டது. இந்த புத்தாண்டில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்கு எதிராக நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என என்டிபி தலைவர் ஜக்மீத் சிங் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கட்சியின் தேசிய காக்கஸ் கூட்டம் வரும் புதன்கிழமை (8ந்தேதி) நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, நடைபெற இருக்கும் தேசிய காக்கஸ் கூட்டத்திற்கு முன்னதாக ட்ரூடோ பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரூடோ பதவி விலக முடிவெடுத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுவரை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஒருவேளை ட்ருடோ பதவி விலகினார், கட்சி தலைமை பதவிக்கான போட்டியில், ஃப்ரீலேண்ட், லெப்லாங்க், முன்னாள் கனேடிய வீட்டு வசதி அமைச்சர் சீன் ஃப்ரேசர், வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி, புத்தாக்க அமைச்சர் ஃபிராங்கோயிஸ்-பிலிப் ஷாம்பெயின், போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த், முன்னாள் மத்திய வங்கியாளர் மார்க் கார்னி மற்றும் முன்னாள் பிரிட்டிஷ் கொலம்பியா பிரதமர் கிறிஸ்டி கிளார்க் என களத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், ட்ரூடோ ராஜினாமா செய்தால், அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தை சமாளிக்கக்கூடிய ஒரு அரசாங்கத்தை அமைக்க விரைவான தேர்தலுக்கான புதிய அழைப்புகளை தூண்டும் என ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு உள்ளன.