டொராண்டோ:
கனடா நாட்டில் உள்ள இந்துக்கோயில் ஒன்றில் தமிழக சிற்பிகள் கொத்தடிமைகளாய் நடத்தப்படும் கொடுமை வெளியாகி உள்ளது.
கனடா நாட்டின் டொராண்டோ நகரில் ஸ்ரீ துர்க்கா இந்து ஆலயம் உள்ளது. இங்கு தற்போது $1.2 மில்லியன் மதிப்பில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக கோயில் நிர்வாகம் தமிழகத்தல் இருந்து நான்கு சிற்பிகளை வரவழைத்துள்ளது.
அவர்களில் இவர், சேகர் குருசாமி,( 51 ) மற்றும் சுதாகர் மாசிலாமணி, (46) ஆவர். இவர்கள்
பெறுமதியான சி.பி.ஏ. என்ற தமிழ் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் தாங்கள் கோயில் நிர்வாகத்தால் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
“தினமும் எட்டுமணி நேரம் வேலை. உரிய ஊதியம்.. மற்றும் சாப்பாடு தங்குமிடம் உண்டு என்று பேசித்தான் கோயில் நிர்வாகம் எங்களை வரவழைத்தது.
ஆனால் தினமும் பன்னிரண்டு மணி நேரம் வரை வேலை வாங்குகிறார்கள். மேலும் உரிய ஊதியம் தரவில்லை.
தவிர எங்களுக்கு தங்குவதற்கு சரியான இடம் அளிக்கவில்லை. கோயில் கட்டிடத்தின் அடித்தளத்தில் உள்ள கொதிகலன் அருகில் மடிக்கும் கட்டில்களில்தான் உறங்க வேண்டும். மூட்டைப்பூச்சி தொல்லை வேறு.
எங்களுக்கு உணவு அளிப்பதில்லை. கடும் பசியால், உடல் சோர்ந்து தலை சுற்றும். ஆனாலும் கோயில் நிர்வாகத்தினர் எங்களுக்கு உணவு அளிக்க மாட்டார்கள்.
சில சமயங்களில், பக்தர்களுக்கு அளிக்கப்படும் சாப்பாட்டில் முதல் மீந்த உணவை அளிப்பார்கள். அவ்வளவுதான்.
அதுமட்டுமல்ல.. தரையிலிருந்து 20 மீட்டர் உயரத்தில் வேலைசெய்தபோதும், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட இரண்டாம் தரத் தலைக்கவசம் மற்றும் பூட்ஸ் ஆகியவற்றையே அளிக்கிறார்கள். மற்ற பாதுகாப்புக் கவசங்கள் எதுவும் எங்களுக்கு அளிக்கப்படவில்லை.
பசியால் மெல்ல மெல்ல செத்துக்கொண்டிருக்கிறோம்.. இதில் ஆபத்தான வேலை வேறு. அப்படி மேலேயிருந்து விழுந்து இறந்துவிட்டால்கூட பரவாயல்லை என்று தோன்றுகிறது.
கடந்த ஐந்து மாதங்களாக இப்படி கொத்தடிமைகளாக உழல்கிறோம். நாள் முழுதும் அழுதபடியே பணியாற்றிக்கொண்டிருக்கிறோம்.
இது குறித்து இங்குள்ள கோயில் சிவாச்சாரியாரிடம் தெரிவித்தால், “விருப்பம் இருந்தால் வேலை பாருங்கள்.. இல்லாவிட்டால் ஓடிப்போங்கள்.. நாய்களா” என்று ஏசுகிறார். அடிக்க வருகிறார். ஒரு சிவாச்சாரியார் போல அவர் இல்லை” என்று அவர்கள் இருவரும் கதறி அழுதபடி தெரிவித்தார்கள்.
மேலும், “எங்களுக்கு கனடிய மொழியோ ஆங்கிலமோ தெரியாது. திக்கு திசை தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம்” என்றார்கள்.
மீதம் உள்ள இருவரை சந்திக்க முடியவில்லை. ஆகவே படத்தில் அவர்களது முகம் மறைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கோயிலின் பிரதம சிவாச்சாரியார் கணசுவாமி தியாகராஜகுருக்களை சந்திக்க சி.பி.ஏ. என்ற தமிழ் இணையம் முயற்சித்தது. அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
அதே நேரம், “கடந்த ஐந்து வருடங்களாக பல்வேறு தொழிலாளர்கள் இந்தக் கோயிலில் பணியாற்றிச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் ஏதும் புகார்கள் தெரிவித்ததில்லை. இந்த தொழிலாளர்களும் நன்றாகவே நடத்தப்படுகிறார்கள்” என்று மட்டும் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கனடா வாழ் தமிழர்கள், “குறிப்பிட்ட துர்கா ஆலயம் வழிபாட்டுத்தலமாக இல்லாமல், வர்த்தக நிறுவனம் போல் செயல்படுகிறது” என்று குற்றம்சாட்டுவதையும் அறிய முடிகிறது.
அரபு நாடுகளில்தான் தமிழக தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடப்படுவதாக புகார்கள் எழும். இந்த நிலையில் நாகரீகத்தில் முன்னேறிய நாடான கனடாவில்.. அதுவும் தமிழர் நிர்வாகத்தில் இருக்கும் கோயிலிலேயே இது போன்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
கடைசிச் செய்தி: சி.பி.சி. இணையதளம் இந்த விவகாரம் குறித்து விசாரித்த பிறகு நான்கு தொழிலாளர்களும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் உரிய ஊதியம் அளிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழிலாளர் நிலை உணர்ந்து அதை வெளிக்கொணர்ந்த சி.பி.சி. இணையத்துக்கு நன்றிகளும், வாழ்த்துகளும்.