
டொரொண்டோ
கனடாவின் பிரதமர் டொரொண்டோவில் உள்ள சுவாமி நாரயண் மந்திருக்கு வந்து இந்து முறைப்படி பூஜை செய்தார்
கனடாவின் பிரதமர் ஜஸ்டின் டுருட்யு மதச் சார்பின்மையுடன் அனைத்து மத விழாக்களிலும், எல்லா நாட்டினரின் கொண்டாட்டங்களில் கலந்துக் கொள்வார். அது இந்திய சுதந்திர தினமானாலும் சரி, ஈத் விழாவானாலும் சரி ஜஸ்டின் வித்தியாசம் பாராமல் தன்னை அழைக்கும் எல்லா விழாக்களிலும் கலந்துக் கொள்வார்.
டொரொண்டோவில் உள்ள இந்துக் கோவில் பாப்ஸ் சுவாமி நாராயண் மந்திர். இது துவங்கி பத்தாண்டுகள் முடிவுற்றதை தொடர்ந்து விசேஷ பிரார்த்தனைகளும் பூஜைகளும் நடைபெற்றது. அதற்கு பிரதமருக்கு அழைப்பு அளிக்கப்பட்டது. அழைப்பை ஏற்று ஜஸ்டின் அங்கு வருகை தந்தார்.
இந்திய உடையான பைஜாமா குர்தா (நீல நிறத்தில்) அணிந்திருந்தார்; அவருக்கு அணிவிக்கப்பட்ட மலர் மாலையை விழா முழுவதும் கழற்றவில்லை. கோயிலை முழுக்க சுற்றிப்பார்த்தார், அபிஷேகம், மற்றும் பூஜையையும் தானே செய்தார்.
கோவிலின் கட்டிட அமைப்பையும், அதிலுள்ள சிற்பங்களையும் புகழ்ந்தார். இது போல ஒரு கோவில் கனடா நாட்டில் இருப்பது நாட்டுக்கே பெருமை சேர்க்கிறது என தன் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார். தான் கோவிலில் இருக்கும் போதும், பூஜையின் போதும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதற்கு இந்தியர்கள், மற்றும் கனடா நாட்டினர் தங்கள் மகிழ்ச்சியையும் நன்றிகளையும் பதிலாக தெரிவித்துள்ளனர்